விருது என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது

"சாகித்ய அகாதெமி விருது' என்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது; மேலும் பல விருதுகள் பெறும் வகையில் தொடர்ந்து எழுதுவேன் என்று எழுத்தாளர் வண்ணதான் தெரிவித்தார்.
தில்லி தமிழ் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனை கெüரவிக்கும் சங்கத்தின் துணைத் தலைவர் கி. பென்னேஸ்வரன்.  உடன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக
தில்லி தமிழ் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனை கெüரவிக்கும் சங்கத்தின் துணைத் தலைவர் கி. பென்னேஸ்வரன். உடன் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக

"சாகித்ய அகாதெமி விருது' என்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது; மேலும் பல விருதுகள் பெறும் வகையில் தொடர்ந்து எழுதுவேன் என்று எழுத்தாளர் வண்ணதான் தெரிவித்தார்.
2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் வண்ணதாசன் ஆற்றிய ஏற்புரை: சாகித்ய அகாதெமி விருது மூலம் ஏராளமான மனிதர்களின் மனங்களை அடைந்து வருகிறேன். இது எனக்கு மேலும் எழுதுவதற்கான ஊக்கத்தையும், உந்துதலையும் அளித்துள்ளது. 2000-ஆம் ஆண்டில் எனது தந்தை தி.க.சிவசங்கரன் என்ற தி.க.சி.க்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. அதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்து அவரது மகனான எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சாகித்ய அகாதெமியின் தமிழ் சரித்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு விருது கிடைத்துள்ளதற்காக மகிழ்கிறேன்.
மண், மரபுகள் போன்றவற்றை அவற்றின் அழகு கெடாமல் உலகுக்கு வெளிப்படுத்துபவர்கள் படைப்பாளிகள். எனது சிறுகதை எழுத்தின் ஊக்குவிப்பாக அமைந்தவை "வல்லிக்கண்ணனின் கடிதங்கள்'. ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதியுள்ளேன். தற்போதும் தொடருகிறேன். ஆனால், சமூக ஊடகங்கள், கைப்பேசிகள், மின்னஞ்சல் ஆகியவற்றின் வரவால் நம்மிடையே கடிதம் எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது. கடிதங்கள், மனித உணர்வைப் புரிய வைப்பவை; உறவை வளர்ப்பவை. ஆகவே, தொடர்ந்து கடிதம் எழுதும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆண் - பெண் புரிதல் இருந்தால் பாலியல் தொடர்பான பிரச்னைகள் உருவாகாது. மனிதர்களை வாசிப்பவர்களாக படைப்பாளிகள் இருக்க வேண்டும். நான் மனிதர்களை வாசிப்பவன். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவன். இந்த விருதோடு நான் நின்றுவிடமாட்டேன். மேலும் பல விருதுகள் அடைய விரும்புகிறேன். விருது என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்றார் வண்ணதாசன்.
தில்லி தமிழ்ச் சங்க திருவள்ளுவர் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை பேராசிரியர் முனைவர் இரா. காமராசு தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், "மிக இயல்பாக தனது படைப்புவெளி உலகில் இயங்குபவர் வண்ணதாசன். தனது கதைகளில் மனிதர்களின் யதார்த்த வாழ்வை படம்பிடித்துக் காட்டுபவர். வண்ணதாசனின் கவிதைகளைப் படித்தால் மனிதர்களைக் கொண்டாடுவது எப்படி என்று நமக்கு கற்றுத் தரும். அந்த அளவுக்கு அற்புதமானவை. இவரது சிறுகதைகள், கவிதைகளை வாசிக்கும் போது வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை, அழகை விரித்துச் சொல்வதாக இருக்கின்றன. அவரது "ஒரு சிறு இசை' அதற்கான சான்றாகும்' என்றார்.
தில்லி தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் கி.பென்னேஸ்வரன், எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய "ஒரு சிறு இசை' நூல் குறித்து விமர்சன உரையாற்றுகையில், "வண்ணதாசனின் கவிதை, சிறுகதை படைப்புகளில், வாழ்க்கையின் பல்வேறு கூறுகள், அழகு - அதில் பொதிந்துள்ள இசை, மனித மனங்களின் பல்வேறு விசித்திரங்கள் ஆகியவை காட்சிப்படங்களாக நம் மனதில் நீடித்து நிலைக்கும். சுமார் 55 ஆண்டுகளுக்கும் மேலான அவரது கலைப் பயணத்தையும் "வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி என்ற படைப்பாளியையும், புதிதாக எழுத வருபவர்கள் படிக்க வேண்டும்' என எழுத்தாளர் சுஜாதா கூறுவார். என்னுடைய பார்வையில் கல்யாண்ஜி கவிதைகளில் இடம்பெறும் சொற்கள் "கைதேர்ந்த பொற்கொல்லனின் தொழில் நேர்த்தி' போல அற்புதமானவை. அவரது சிறு கதைகள் அதை விட அருமையானவை. ஆனந்த விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்த 15 கதைகளின் தொகுப்பாக "ஒரு சிறு இசை' நூல் இருந்த போதிலும் அவற்றில் ஒவ்வொன்றும் தனிச் சிறப்புடன் திகழ்பவை' என்றார்.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலர் இரா. முகுந்தன் வரவேற்றுப் பேசுகையில், "வண்ணதாசனை பாராட்டுவதில் தில்லி தமிழ்ச் சங்கம் பெருமை கொள்கிறது. சங்க அரங்கில் வண்ணதாசனை பேச அழைக்க நினைத்து பலசமயம் அது நிறைவேறாமல் போனது. அந்த ஆசை இந்த விழா மூலம் நிறைவேறி விட்டது. அவரது வரவால் தில்லி தமிழ்ச் சங்கம் பெருமை கொள்கிறது' என்றார்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் துணை தலைவர் கே.வி.கே. பெருமாள் மற்றும் சங்கத்தின் தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள், ஏராளமான தில்லிவாழ் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் இணைச் செயலர் ரமாமணி சுந்தர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com