ஒடிஸூ மக்களிடம் பிஜு ஜனதா தளமும், காங்கிரஸூம் மன்னிப்பு கேட்க வேண்டும்

ஒடிஸூவில் வளர்ச்சியை ஏற்படுத்தாததற்காக பிஜு ஜனதா தளமும், காங்கிரஸூம் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும், பாஜக பிரமுகருமான தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.

ஒடிஸூவில் வளர்ச்சியை ஏற்படுத்தாததற்காக பிஜு ஜனதா தளமும், காங்கிரஸூம் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும், பாஜக பிரமுகருமான தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து ஒடிஸூவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ஒடிஸூவில் தமது 17 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியவில்லை என்பதை பிஜு ஜனதா தளம் உணர வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியில் இல்லாத காலகட்டமான 2013-இல் ராஜன் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில் "மிகக் குறைவான வளர்ச்சி கொண்ட மற்றும் மிகவும் பின்தங்கிய மாநிலம்' என்று ஒடிஸூவைக் குறிப்பிட்டிருந்தது.
மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்துக் குறைவால் சிசுக்கள் இறந்தது, மல்கான்கிரி மாவட்டத்தில் ஜப்பானிய விஷக்காய்ச்சலால் பல்வேறு குழந்தைகள் உயிரிழந்தது போன்ற விவகாரங்களை காங்கிரஸ் கட்சி எழுப்பியிருந்தது. அக்கட்சி எழுப்பிய இந்தப் பிரச்னைகள் எல்லாம் ஏழ்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை உணர்த்தவில்லையா?
எனவே, ஒடிஸூ குறித்து கருத்து தெரிவித்ததற்காக பிரதமரை விமர்சிப்பதற்குப் பதிலாக, இந்த மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தாததற்காக பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒடிஸூவில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது வரும் 2019-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவிருப்பதற்கான அறிகுறியாகும் என்றார் தர்மேந்திர பிரதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com