ப. சிதம்பரம் தலைமையில் நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் நாளை தொடக்கம்

முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் திங்கள், செவ்வாய் (பிப். 27,28) ஆகிய நாள்களில் தில்லியில் நடைபெறவுள்ளது.
ப. சிதம்பரம் தலைமையில் நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் நாளை தொடக்கம்

முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் திங்கள், செவ்வாய் (பிப். 27,28) ஆகிய நாள்களில் தில்லியில் நடைபெறவுள்ளது.
இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முதலாம் நாளில் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகிறார். அப்போது, 2017-18 நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய உள்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து நிலைக் குழுவிடம் ராஜீவ் மெஹ்ரிஷி விளக்குவார்.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் கூட்டத்தின் முதல் பகுதியில், மத்திய உள்துறையின் கீழ் உள்ள மத்திய காவல் அமைப்புகள், துணை ராணுவப் படைகள், தில்லி காவல் துறை ஆகியவற்றுக்குரிய நிதி ஒதுக்கீடு தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து ராஜீவ் மெஹ்ரிஷ் விளக்கம் அளிக்க உள்ளார். இரண்டாம் பகுதியில், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து ராஜீவ் மெஹ்ரிஷ் விளக்கம் அளிப்பார். இந்தக் கூட்டங்களின் போது, நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவற்றுக்கு உள்துறைச் செயலர் ராஜீவ் மெஹ்ரிஷ் பதில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடு தொடர்பான அறிக்கையை நாடாளுமன்ற நிலைக் குழு தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.
சிதம்பரம் தலைமை: இதுபோன்ற நிலைக்குழுக்கள் கூடி மத்திய அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கமானதுதான். என்றாலும், மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தற்போது, அத்துறைக்கான நிலைக் குழுவின் தலைவராக உள்ளார். எனவே, அந்த அமைச்சகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் மிகவும் நன்றாக அறிந்தவராக சிதம்பரம் கருதப்படுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போதே, உள்துறை அமைச்சகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள், வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை சிதம்பரம் உறுதிப்படுத்தியிருந்தார். எனவே, நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் சிதம்பரம் தலைமையிலான குழுவின் கேள்விகளுக்குரிய பதிலையும் சந்தேகங்களையும் களையாவிட்டால் அது தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.
பரபரப்புடன் அமைச்சகம்: இதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஒரு வாரமாக உள்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள் குழு மாலையில் பணி முடிந்த பிறகும் கூடுதல் நேரத்துக்கும் சிலர் இரவு, பகலாகவும் துணை மானியக் கோரிக்கள் மீதான விளக்கம் அடங்கிய அறிக்கையை துறை வாரியாகப் பிரித்துத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இணைச் செயலர்கள், துணைச் செயலர்கள், இயக்குநர்கள், இளநிலைச் செயலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வந்தனர். இதனால், விடுமுறை நாளான சனிக்கிழமையும் உள்துறை அமைச்சகம் பரபரப்பாகக் காணப்பட்டது.
அதிமுக குழுக்கள்: மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் சிதம்பரம், திரிணாமூல் காங்கிரஸின் டெரக் ஓ பிரெய்ன் உள்பட 10 மாநிலங்களவை உறுப்பினர்கள், காங்கிரûஸச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, அதிர் ரஞ்சன் சௌத்ரி உள்பட 21 மக்களவை உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் வா.மைத்ரேயன் (ஓ.பி.எஸ் அணி); பி.நாகராஜ், செல்வராஜ் சின்னையன் (சசிகலா அணி) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆளும் அதிமுகவைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியின் தலைவர் சசிகலா தலைமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் மீது கட்சித் தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இரு அணிகளைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தில்லியில் ஒரே நிகழ்வில் சந்தித்துக் கொள்ளவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com