பாஜகவை தோற்கடிக்க பகுஜன் சமாஜுக்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும்: மாயாவதி

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜகவைத் தோற்கடிக்க பகுஜன் சமாஜ் கட்சிக்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜகவைத் தோற்கடிக்க பகுஜன் சமாஜ் கட்சிக்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜாதி, மதம் அடிப்படையில் தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்குக் கோரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜுக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்களை மாயாவதி கேட்டுக் கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், தியோரியாவில் சனிக்கிழமை நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்காக இதற்கு முன்பு குருவும், சிஷ்யரும் (பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷாவை இவ்வாறு குறிப்பிட்டார்) ஒன்று சேர்ந்தனர். தற்போது உத்தரப் பிரதேசத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கனவுடன் இருவரும் இணைந்துள்ளனர். மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவ பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் பெயரோடு ஒப்பிட்டு, எதிர்க்கட்சியினரை பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார். பாஜக தலைவரை விட வேறு பெரிய கசாப் இல்லை. குஜராத் கலவர சம்பவத்தை மாதிரியாக எடுத்துக் கொண்டு, இந்த கசாப்பை உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலித்துகளின் வாக்குகள் இருக்கிறது. இந்நிலையில், பாஜகவைத் தோற்கடிக்க பகுஜன் சமாஜுக்கு முஸ்லிம்களும் பெருமளவில் வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்படி வாக்களித்தால், பாஜக தோல்வியடைவது உறுதி.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி அரசின் ஆட்சியின்கீழ் முஸ்லிம்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றனர். எனவே தேர்தலில் அக்கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கக் கூடாது. அப்படி வாக்களித்தால், அது பாஜக வெற்றி பெற செய்யும் உதவியாகிவிடும் என்றார் மாயாவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com