தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவு

தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா (91) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவு

தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா (91) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதம் உச்சகட்டத்தில் இருந்தபோது, அந்த மாநிலத்தின் முதல்வராக 1985 முதல் 1987-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. தமிழகத்தின் ஆளுநராக கடந்த 1990 முதல் 1991-ஆம் ஆண்டு வரையிலும், 2004-ஆம் ஆண்டு தொடங்கி 2011-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரு முறையும் அவர் பதவி வகித்தார்.
1991-ஆம் ஆண்டு சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரைக்குமாறு பர்னாலாவை வலியுறுத்தியது. எனினும், அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அவரை பிகாரின் ஆளுராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவை ஏற்க மறுத்த பர்னாலா, தனது பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தமிழகம் தவிர, உத்தரகண்ட், ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆளுநராக பொறுப்பு வகித்தார்.
முன்னதாக, மத்தியில் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி வகித்துள்ளார். அரசியல்வாதியாக மட்டுமன்றி, ஒரு சிறந்த ஓவியராகவும், நூலாசிரியராகவும் பர்னாலா விளங்கினார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சண்டீகரிலுள்ள முதுநிலை மருத்துவப் பட்ட ஆராய்ச்சிக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டார். அங்கு உடல்நிலை மேலும் மோசமடைந்து சனிக்கிழமை காலமானார்.
சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். அவரது உடல், அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
இரங்கல்: சுர்ஜித் சிங் பர்னாலாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com