நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடங்கள் காலி

நாடு முழுவதும் காவல்துறை பணியிடங்களில் 5 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் காவல்துறை பணியிடங்களில் 5 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
நாடு முழுவதும் அனைத்து மாநில காவல்துறைகளுக்கும் 22 லட்சத்து 63 ஆயிரத்து 222 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 17 லட்சத்து 61 ஆயிரத்து, 200 பணியிடங்களில் மட்டுமே ஆட்கள் பணிபுரிந்து வருகின்றனர். 5 லட்சத்து 2 ஆயிரத்து 22 இடங்கள் காலியாகவே உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 1.80 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்த மாநிலத்துக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 3.64 லட்சம் ஆகும். இதற்கடுத்து மேற்கு வங்க மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தமாக அனுமதிக்கப்பட்ட 1.11 லட்சம் பணியிடங்களில் 35 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பிகாரில் 1.12 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 30, 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. கர்நாடகத்தில் 25,500 பணியிடங்களும், குஜராத்தில் 17,200 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.
தமிழகத்தில்...: தமிழகத்தில் காவல்துறைக்கு 1,35,830 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 17,700 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
ஜார்க்கண்டில் 15,400, சத்தீஸ்கரில் 8,500 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் மற்றோர் புள்ளி விவரம், நாட்டில் உள்ள 188 காவல்நிலையங்களுக்கு வாகன வசதி இல்லை என்றும், 402 காவல்நிலையங்களில் தொலைபேசி இணைப்பு வசதி, 134 காவல்நிலையங்களில் வயர்லெஸ் சாதன வசதி, 65 காவல்நிலையங்களில் மேற்கண்ட 2 வசதிகளும் இல்லையெனத் தெரிவிக்கிறது.
மேலும், நாட்டில் மொத்தம் 15,555 காவல்நிலையங்கள் உள்ளன. இதில் கிராமங்களில் 10,014 காவல் நிலையங்களும், எஞ்சியவை நகர்புறங்களிலும் உள்ளன. இதில் 100 போலீஸாருக்கு 10 வாகனம் என்ற அளவில் 1,75,358 வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று மற்றோர் தகவல் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com