சிபிஐ-க்கு விரைவில் புதிய இயக்குநர்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதில் நீடிக்கும் இழுபறிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதில் நீடிக்கும் இழுபறிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய இயக்குநர் யார்? என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு விரைவில் முடிவெடுக்கும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றார். பொதுவாக, சிபிஐ அமைப்பின் இயக்குநரை பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் பிரதிநிதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும். அதற்கான நடைமுறைகள் நிறைவடையும் வரை இடைக்காலமாக சிபிஐ இயக்குநர் பொறுப்புக்கு ஒருவர் நியமிக்கப்படுவது வழக்கம்.
அனில் சின்ஹா ஓய்வு பெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த, அதாவது சிபிஐ சிறப்பு இயக்குநர் பொறுப்பு வகித்து வந்த ஆர்.கே.தத்தா, மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வந்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு இடைக்கால இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தத்தாவுக்கு வர வேண்டிய இயக்குநர் பொறுப்பை வேண்டுமென்றே மத்திய அரசு தடை செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும், சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் தலைமையிலான குழு கூடி முடிவெடுக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி வாதிட்டதாவது:
சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு, திங்கள்கிழமை கூடி விவாதித்தது. புதிய இயக்குநர் தேர்வுக்காக பரிசீலிக்கப்பட்டு வரும் நபர்கள் குறித்த இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில், புதிய இயக்குநர் பெயர் வெளியிடப்படும் என்றார் அவர்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினத்தில், சிபிஐ அமைப்புக்கான புதிய இயக்குநரின் பெயரை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com