பஞ்சாப்: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை சோனியாவே முடிவு செய்வார்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சோனியா காந்தியே முடிவு செய்வார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அம்ரீந்தர் சிங்
பஞ்சாப்: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை சோனியாவே முடிவு செய்வார்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சோனியா காந்தியே முடிவு செய்வார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அம்ரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாட்டியாலாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் மேலும் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு முக்கிய பதவி வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
பொதுவாகவே, காங்கிரஸ் கட்சி யாருடனும் இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்வதில்லை. குறிப்பாக, சித்துவுடன் இதுபோன்று எவ்வித ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. மேலும், அவரும் அவ்வாறு எதையும் கோரவில்லை. நான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவேனா? என எனக்குத் தெரியாது.
முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்தி தான் முடிவு செய்வார்.
சித்துவின் குடும்பத்தினரை பல ஆண்டுகளாக நான் அறிவேன். சித்துவின் இளம் பருவத்தில் பாட்டியாலாவில் அவர் கிரிக்கெட் ஆடிய காலம்தொட்டு, அவரை கவனித்து வருகிறேன். அவருடைய தந்தையும் காங்கிரஸை சேர்ந்தவர் தான். பாட்டியாலாவில் தான் நான் பிறந்தேன். எனது அரசியல் வாழ்க்கையை இங்கு தான் தொடங்கினேன். இது எனது கடைசித் தேர்தல் என்பதால், இங்கேயே போட்டியிட விரும்புகிறேன்.
அதேசமயம், சிரோமணி அகாலி தளத் தலைவரும், மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலின் சொந்தத் தொகுதியான லம்பியிலும் போட்டியிடும் நான் அவரைத் தோற்கடிப்பேன்.
கடந்த 10 ஆண்டுகளாக, மாநிலத்துக்கும், மாநில மக்களுக்கும் பாதல் குடும்பத்தினர் இழைத்த துரோகத்துக்கு தக்க பதிலடி கொடுப்பேன்.
கேஜரிவாலுக்கு சவால்: லம்பி தொகுதியில் பிரகாஷ் சிங் பாதல் எளிதாக வெற்றி பெறுவதற்காகத் தான், அவரை எதிர்த்து நான் போட்டிடப் போவதாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். முடிந்தால், அவருடைய கட்சி அத்தொகுதியில் போட்டியிடட்டும். அப்போது தான், கேஜரிவாலின் நிலையும், அவருடைய கட்சியின் நிலையும் தெரிய வரும் என்றார் அவர்.
வேட்பு மனு தாக்கல்: இதனிடையே, பாட்டியாலா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அம்ரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவர், லம்பி தொகுதியில் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com