பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்: சமூக வலைதளங்களை ஆய்வு செய்யும் வருமான வரித் துறை

பஞ்சாபில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,சமூக வலைதளங்களை வருமான வரித் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

பஞ்சாபில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,சமூக வலைதளங்களை வருமான வரித் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இதுதொடர்பாக, சண்டீகரில் அந்தத் துறையின் (புலனாய்வுப் பிரிவு) முதன்மை இயக்குநர் பர்நீத் சச்தேவ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியப் பிரமுகர்களின் சமூக வலைதளப் பக்கங்களை வருமான வரித் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும், அவை ஆய்வுக்கும் உட்படுத்தப்படுகின்றன.
தேர்தலில் கருப்புப் பண உபயோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முக்கியப் பிரமுகர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக, பொதுமக்களும் எங்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர் என்றார் அவர்.
பஞ்சாபில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்களும் தங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடர்பான புகைப்படங்களையும், விடியோ பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைதளங்களை வருமான வரித் துறை ஆய்வு செய்து வருவதால் வேட்பாளர்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
ரூ. 4.5 கோடி பறிமுதல்: பஞ்சாபில் ஜனவரி 4-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பு கணக்கில் வராத ரூ. 4.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை (புலனாய்வுப் பிரிவு) தலைமை இயக்குநர் மது மகாஜன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் (500, 1,000) செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மாநிலத்தில் மொத்தம் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், ரூ. 4.5 கோடி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பு பறிமுதல் செய்யப்பட்ட தொகையாகும்.
இந்தத் தொகை அரசியல் கட்சிகளுடையதா அல்லது வேட்பாளர்களுடையதா என விசாரணை நடைபெற்று வருகிறது.
வேட்பு மனுக்கள் மீது ஆய்வு: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய சொத்துகள், கடன் குறித்து வேட்பு மனுக்களில் தெரிவித்துள்ள விவரங்கள் குறித்து ஆய்வு செய்வோம்.
மேலும், கடந்த தேர்தலின்போது அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களுடன் இந்த வேட்பு மனுக்களை ஒப்பீடு செய்வோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com