ராகுலின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக காங்கிரஸ் சின்னத்தை முடக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

கடவுள்கள் மற்றும் மகான்களின் புகைப்படங்களில் காங்கிரஸின் சின்னத்தை (கை) காண்கிறேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துவிட்டு வெளியே வந்த மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜாவடேகர்
தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துவிட்டு வெளியே வந்த மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜாவடேகர்

கடவுள்கள் மற்றும் மகான்களின் புகைப்படங்களில் காங்கிரஸின் சின்னத்தை (கை) காண்கிறேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக செவ்வாய்க்கிழமை புகார் அளித்தது.
காங்கிரஸ் சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்தகைய கருத்தை ராகுல் தெரிவித்திருந்தார். ஜாதி, மதங்களின் பெயரைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ள நிலையில், ராகுலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராகுலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோரும், பாஜக முக்கிப் பிரமுகர்கள் சிலரும் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் நக்வி கூறியதாவது:
தேர்தலில் மத சாயத்தைப் பூச காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். இதுவும் ஒருவகையில் ஊழல்தான். எனவே, அவருக்கு எதிராகவும், அக்கட்சிக்கு எதிராகவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நக்வி.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், "காங்கிரஸின் சின்னம் முடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்' என்றார்.
முன்னதாக, "ராகுலின் கருத்து உச்ச நீதிமன்ற உத்தரவை மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 123 (3)-ஐயும் மீறும் வகையில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்' என்று கோரி உத்தரப் பிரதேச மாநில தலைமைத் தேரதல் அலுவலரிடமும் பாஜக அண்மையில் புகார் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com