அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டால் சட்டப்படி எதிர்கொள்ளப்படும்: பீட்டா

"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றுமானால், அதனை எதிர்கொள்வதற்கான சட்ட வழிமுறைகளைக் கையாளுவோம்'' என்று விலங்குகள் நல அமைப்பான
அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டால் சட்டப்படி எதிர்கொள்ளப்படும்: பீட்டா

"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றுமானால், அதனை எதிர்கொள்வதற்கான சட்ட வழிமுறைகளைக் கையாளுவோம்'' என்று விலங்குகள் நல அமைப்பான "பீட்டா' தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மணிலால் வல்லியாதே, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
அனைத்து விலங்குகளையும் வதைப்பதற்கு எதிராகத்தான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவருமானால், அதை எதிர்ப்பதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து எங்கள் தரப்பு வழக்குரைஞர்களிடம் கலந்தாலோசிப்போம்.
நாட்டு காளையினங்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறு எளிய வழிமுறைகள் உள்ளன; ஜல்லிக்கட்டு மட்டுமே வழியல்ல. 1980-களில் நாட்டு காளையினங்களையும், நாட்டுப் பசுவினங்களையும் பாதுகாப்பதற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தொடங்கியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தபோதிலும், வெண்மைப் புரட்சி, கலப்பின பசுக்களின் வரவு ஆகியவற்றின் காரணமாக, நாட்டு பசுவினங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. சில நாட்டு காளையினங்கள் முற்றிலுமாக அழிந்தவிட்டன.
இந்நிலையின் தவறான புரிதல்களின் அடிப்படையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், நமது அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நன்றாக வாசிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
காளையினங்கள், இறைச்சி வகையைச் சேர்ந்தவை; அவற்றை சாலையில் திரிந்தால் கூட தொந்தரவு செய்யக் கூடாது. காளையினங்களின் உணர்வுகளைத் தூண்டும்போதுதான், அவை மூர்க்கத்தனமாக மாறும். காளையினங்களின் உணர்வுகளைத் தூண்டும்போது, அவை துன்புறுத்தப்படுகின்றன; காயமடைகின்றன.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் இயல்பிலேயே காளைகளை வதைப்பது இடம்பெற்றுள்ளது. ஒரு அச்சுறுத்தலான சூழலில் காளைகளை ஓட விடுவதும், அவற்றைத் துன்புறுத்துவதும் நடைபெறுகிறது.
எனவே, தேவையற்ற துன்புறுத்தல்களுடன் கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டியை நாங்கள் எதிர்க்கிறோம். பாரம்பரியத்துக்கும், சட்டத்துக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகும்போது,சட்டத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
எனவே, சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கும் வகையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com