ஆர்பிஐ பாதுகாவலர் மன்மோகன்; அதிகாரத்தைப் பறிப்பவர் மோடி: காங்கிரஸ் ஒப்பீடு

ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார்; அதேவேளையில், அதன் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும்

ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார்; அதேவேளையில், அதன் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று தற்போதைய பிரதமர் மோடி நினைக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு (நிதி) கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பாஜக எம்.பி.க்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அந்தக் குழுவின் முன்பு ஆஜராகி சில விளக்கங்களை அளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
அதன்படி, நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உர்ஜித் படேலிடம், பல்வேறு கடினமான கேள்விகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது குறிக்கிட்ட முன்னாள் பிரதமரும், ஆர்பிஐ முன்னாள் ஆளுநருமான மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்புக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மன்மோகன் சிங்கின் இந்த நடவடிக்கையையும், பிரதமர் மோடியின் செயல்பாட்டையும் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான கபில் சிபல் சுட்டுரையில் (டுவிட்டர்) வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ரிசர்வ் வங்கியின் மாண்பைப் பேணிக்காக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருதுகிறார். அதேவேளையில், அதன் அதிகாரத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உர்ஜித் படேலை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார். "இதற்கு முன்னால் ஆர்பிஐ ஆளுநராக இருந்தவர் வெளியிடும் விளக்கங்களையும், தற்போது அப்பொறுப்பில் உள்ளவர் தெரிவித்திருக்கும் விளக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; இரண்டுக்கும் என்ன ஒரு வேறுபாடு!' என்று சுட்டுரைப் பதிவில் திக்விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com