ஜல்லிக்கட்டு: தேசங்கள் தாண்டி பரவும் எழுச்சிப் போராட்டம்!

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி பிரிட்டன், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி பிரிட்டன், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டு எரியும் இளைஞர்களின் போராட்டம் தற்போது தேசங்கள் தாண்டி பரவியிருப்பது ஜல்லிக்கட்டுக்கு உலகம் முழுவதிலும் ஆதரவு வலுத்து வருவதை உணர்த்துகிறது.
லண்டன் உள்பட பிரிட்டனின் பல்வேறு நகர்களில் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். "ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம்'; "ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கைகளில் தாங்கியபடி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்ததாகத் தெரிகிறது.
இந்த வார இறுதியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் பிரிட்டன் வாழ் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேபோன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிப்பது தமிழ் இனத்தின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சி என்று சிட்னி தமிழ்ச் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
இவை ஒருபுறமிருக்க அண்டை நாடான இலங்கையின் யாழ்ப்பாணம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு முடக்குவது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com