உ.பி. சட்டப் பேரவைத் தேர்தல்: சமாஜவாதி முதல் வேட்பாளர் பட்டியலில் சிவபால் சிங்

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 191 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் சமாஜவாதிக் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
உ.பி. சட்டப் பேரவைத் தேர்தல்: சமாஜவாதி முதல் வேட்பாளர் பட்டியலில் சிவபால் சிங்

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 191 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் சமாஜவாதிக் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் முதல்வர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும், அதிருப்தித் தலைவருமான சிவபால் சிங், சர்ச்சைக்குரிய அமைச்சர் ஆஸம் கான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளும் சமாஜவாதிக் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மொத்தமுள்ள 403 இடங்களில் 191 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவரான அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவபால் சிங், ஜவஸ்வந்த்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அகிலேஷை அவர் எதிர்த்தாலும், இத்தொகுதியை அவருக்கு வழங்குமாறு முலாயம் சிங் கோரியிருந்ததன் அடிப்படையில் சிவபாலுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சிவபால் சிங்கின் பெயர் இடம்பெற்றிருப்பது, அகிலேஷ் தரப்புக்கும், முலாயம் சிங் தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே, சமாஜவாதிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்று சிவபால் சிங் கடந்த மாதம் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார். முலாயம் சிங் தயாரித்த அப்பட்டியலை ஏற்க அகிலேஷ் மறுத்துவிட்டார். சிவபாலின் பட்டியலில் ராம்நகர் தொகுதியில் மாநிலங்களவை எம்.பி. வேணிபிரசாத் வர்மாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. எனினும், அத்தொகுதியில் அகிலேஷ் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அவரது ஆதரவாளரான அமைச்சர் அரவிந்த் சிங் கோபேவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜவாதிக் கட்சியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய அமைச்சரான ஆஸம் கான், தனது பாரம்பரிய தொகுதியான ராம்பூரில் போட்டியிடுகிறார். அவரது மகன் அப்துல்லா ஆஸம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வார் தொகுதியில் போட்டியிடுகிறார். சிவபால் சிங் கடந்த மாதம் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் விடுபட்டுப் போன அகிலேஷ் ஆதரவாளர்கள் சிலரின் பெயர்கள் தற்போதைய வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, "சமாஜவாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ்தான்' என்று தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அங்கீகரித்ததைத் தொடர்ந்து, தாம் நிறுத்த விரும்பும் சிவபால் சிங் உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை முலாயம் சிங் சில தினங்களுக்கு முன் அகிலேஷிடம் ஒப்படைத்தார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 52 பேர் முஸ்லிம்கள், 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய மற்றும் குற்ற வழக்குகளில் சிக்கிய நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்பதில் அகிலேஷ் கவனமாக இருக்கிறார். எனினும், பகுஜன் சமாஜ் பிரமுகர் பிரம்மதத் துவிவேதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் சிங்கின் பெயர் தற்போதைய வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவர் ஃபரூக்காபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக, தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அதீக் அகமதுவின் பெயர் சிவபால் சிங் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், தற்போதைய வேட்பாளர் பட்டியலில் அவருக்குப் பதிலாக அவரது மகன் முகமது ஹசன் ரூமியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com