கருப்புப் பண டெபாசிட் திட்டம்: கூட்டுறவு வங்கிகளுக்கு தடை

கருப்புப் பண பதுக்கல்காரர்கள், தங்களது பணத்தை 50 சதவீத வரியுடன் வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் "பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின்கீழ்' டெபாசிட்டுகளை பெறுவதற்கு

கருப்புப் பண பதுக்கல்காரர்கள், தங்களது பணத்தை 50 சதவீத வரியுடன் வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் "பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின்கீழ்' டெபாசிட்டுகளை பெறுவதற்கு, கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நடவடிக்கைக்கு பிறகு கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின்கீழ், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு 50 சதவீத வரி, கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதுடன், மீதமுள்ள தொகையில் நான்கில் ஒரு பகுதி, 4 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும். அதற்கு எந்த வட்டியும் வழங்கப்படமாட்டாது. இதுபோன்ற டெபாசிட்டுகள் குறித்த விவரங்கள், வங்கிகளால் மின்னணு முறையில் பராமரிக்கப்படுவதுடன், ரகசியமும் காக்கப்படுகிறது.
வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் இத்திட்டத்தின்கீழ், எந்த வங்கியிலும் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது டெபாசிட்டுகளை பெறுவதற்கு, கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்காக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது, வருமான வரித் துறையினர் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்தே, மேற்கண்ட அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸுக்கு பிறகு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதற்கு கூட்டுறவு வங்கிகளுக்கு தொடக்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சில நாள்களிலேயே, அதற்கு தடை விதித்து, ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தககது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com