சிபிஐ இயக்குநர் நியமன விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

சிபிஐ இயக்குநர் நியமன விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

சிபிஐ இயக்குநர் நியமன விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த மாதம் (டிசம்பர்) 2-ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பின், புதிய இயக்குநர் உடனடியாக நியமிக்கப்படவில்லை. மாறாக, தாற்காலிக இயக்குநராக ராகேஷ் ஆஸ்தானாவை மத்திய அரசு நியமித்தது.
இந்த நியமனத்தை எதிர்த்து "காமன் காஸ்' என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த அந்த மனுவில், "விதிமுறைகளை மீறி ராகேஷ் ஆஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 2-ஆம் தேதி அனில் சின்ஹாவின் பதவிக்காலம் முடியப் போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும் பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு கூடி புதிய சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்யவில்லை' என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசஃப், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இதனிடையே, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், மக்களவை காங்கிரஸ் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு சிபிஐ-யின் புதிய இயக்குநராக தில்லி காவல்துறை ஆணையர் அலோக் குமார் வர்மாவைத் தேர்வு செய்தது. எனினும், அவரது தேர்வுக்கு மல்லிகார்ஜுன கார்கே ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், அலோக் குமார் வர்மாவுக்கு சிபிஐ-யில் பணியாற்றிய அனுபவம் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேற்கண்ட மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது பிரசாந்த் பூஷண் கூறியதாவது:
சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் என்னென்ன கருத்துகள் பேசப்பட்டன? என்ற விவரக்குறிப்பை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனு மீதான வாதம் கடந்த முறை நடைபெற்றபோது, அந்த விவரக்குறிப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி தெரிவித்தார் என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டார்.
அப்போது முகுல் ரோத்தகி கூறியதாவது:
சிபிஐ இயக்குநர் நியமனம் நடைபெற்று விட்டது. அப்பதவிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி அலோக் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், விவரக்குறிப்புகளை தாக்கல் செய்யும் கேள்வி எங்கே எழுந்தது? இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு விட்டது. முடிந்துபோன விஷயத்தை நீங்கள் எழுப்புவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த ரிட் மனுவின் வரம்புக்குள் விவரக்குறிப்புகளை அளிக்க உத்தரவிடுவது வராது. எனவே, இம்மனு முடித்து வைக்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com