ரூபாய் நோட்டு விவகாரம்: பொது கணக்குக் குழுவிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வெள்ளிக்கிழமை
ரூபாய் நோட்டு விவகாரம்: பொது கணக்குக் குழுவிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தில்லியில் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன்பு உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆர். காந்தி மற்றும் ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகினர். சுமார் 4 மணி நேரம் வரை அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அப்போது அவர்கள், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி இடையே 2016-ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே ஆலோசனை தொடங்கி விட்டதாக குறிப்பிட்டனர். மேலும், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பாக நடைபெற்ற ரிசர்வ் வங்கி ஆலோசனைக் கூட்டத்தில், உர்ஜித் படேல், துணை ஆளுநர்கள் ஆர். காந்தி, எஸ்.எஸ். முந்த்ரா, இயக்குநர்கள் 5 பேரும் கலந்து கொண்டனர் என்றும் தெரிவித்தனர்.
மேலும் 2 இயக்குநர்கள் சில காரணங்களுக்காக அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதுகுறித்து பிஏசி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்பட்ட பிறகு, இணையவழி பணம் செலுத்துவதற்கு பிடித்தம் செய்யப்படும் பரிவர்த்தனைக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான நடைமுறையை வகுக்கும் பணியில் தீவிரமாக ரிசர்வ் வங்கி ஈடுபட்டிருப்பதாக உர்ஜித் படேல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வங்கிகள், பணம் செலுத்துவதற்கான வழிமுறை அமைப்புகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேபோல், "கிராமங்கள், நகரங்களில் தற்போது பண விநியோக நிலையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, கிராமங்களில் மட்டுமே சில பிரச்னைகள் உள்ளன, அதுவும் சில வாரங்களில் சரி செய்யப்பட்டு விடும்' என்றும் உர்ஜித் படேல் கூறினார்.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிது காலத்துக்கு பாதிப்பு இருக்குமென்றும், ஆனால் நீண்ட கால அடிப்படையில் அது நாட்டுக்கு பெரும் பயனைத் தரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்தார் என்று பிஏசி வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இதுகுறித்து பிஏசி தலைவர் கே.வி. தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், " இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சக அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்கப்படவுள்ளது; அதுதொடர்பாக விவாதிக்க பிஏசி கூட்டம் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி நடைபெறும். தேவை ஏற்பட்டால், உர்ஜித் படேலை மீண்டும் அழைத்து விளக்கம் கேட்போம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com