தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, விதிகளை மீறி செயல்பட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, விதிகளை மீறி செயல்பட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவாவில் உள்ள பர்தேஸ் தாலுகாவில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார ப் பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களை ஓட்டுக்கு பணம் பெற ஊக்கப்படுத்தியதாக அரவிந்த் கேஜரிவால் மீது தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இது குறித்து பதிலளிக்குமாறு கேஜரிவாலுக்கு கடந்த 21-ஆம் தேதி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, வழக்குரைஞர் கைலாஷ் கெலாட் மூலம் கடந்த 19-ஆம் தேதியிட்ட கேஜரிவாலின் பதில் கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், கோவா தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் விதிகளை மீறும் வகையில் ஏதும் பேசவில்லை என்றும், வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பதாகவோ, பிறர் அளிக்கும் பணத்தைப் பெற வலியுறுத்துவதாகவோ பிரசார உரையில் குறிப்பிடவில்லை என்று கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
அவரது பதிலை தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தனது முடிவை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேர்தல் ஆணையத்துக்கு நீங்கள் அனுப்பியுள்ள பதில் திருப்திகரமாக இல்லை. தேர்தல் நேரத்தில் பாஜக தொண்டர்கள் பணம் அளிக்க முன்வந்தால், விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களைக் கூறி அவர்கள் ரூ.5 ஆயிரம் அளித்தால் அதைப் பெறாமல் ரூ.10 ஆயிரம் கேட்டுப் பெற வேண்டும் என பேசியுள்ளீர்கள். ஆனால், பதில் கடிதத்தில் அதை மறுத்துள்ளீர்கள். உங்கள் செயல் மூலம் வாக்காளர்களை வாக்குக்கு லஞ்சம் பெற தூண்டியுள்ள நடவடிக்கை, தேர்தல் நடத்தை விதிகளின்படி குற்றமாக ஏன் கருதக் கூடாது?
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் இதேபோன்ற செயல்பாட்டுக்காக தேர்தல் ஆணையம் உங்களுக்கு கண்டனம் தெரிவித்தது. தற்போதும் அதே தவறை செய்துள்ளீர்கள். எனவே, இத்தவறை எதிர்காலத்தில் மீண்டும் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறோம்.
தில்லி முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராகவும் நீங்கள் உள்ளீர்கள். தேர்தல் நடத்தை விதிகளை மதித்து முன்னுதாரமாக செயல்படுவதுதான் உங்கள் பொறுப்புக்கு உகந்தது. ஆனால் ஓட்டுக்கு பணம் பெற தூண்டும் வகையில் நீங்கள் பேசியிருப்பது கவலை அளிக்கிறது.
இதன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறியுள்ளீர்கள். இதற்காக தேர்தல் ஆணையம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இதுபோல தொடர்ந்தால் உங்கள் மீதும், கட்சிக்கும் எதிராகவும் தேர்தல் சின்னத்தை முடக்குவது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com