சுமித்ரா மகாஜன் தலைமையில் 30-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுமித்ரா மகாஜன் தலைமையில் 30-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
முதல் நாள் அமர்வில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டுக்கும் பொதுவாக கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெறும். அதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார். அப்போது, பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 9-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் பட்ஜெட் தாக்கல் நடவடிக்கைகளை மார்ச் 8-ஆம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், திட்டமிட்டபடி பிப்ரவரி மாதம் முதல் தேதியிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
ரயில்வே பட்ஜெட்டை தனியாக அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டு, நிகழாண்டில் இருந்து மத்திய பட்ஜெட்டுடன் அதை சேர்த்துத் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அண்மையில் நிறைவடைந்த குளிர்காலக் கூட்டத் தொடரைப் போல அல்லாமல், இந்தத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது. அதற்காக ஒத்துழைக்குமாறு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கும் எனவும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com