சேனல் பேர மாத்து: அர்னாப்புடன் மல்லுக்கட்டும் சுப்ரமணியன் சுவாமி!

புகழ்பெற்ற தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி விரைவில் துவங்கவுள்ள செய்தி தொலைக்காட்சிக்கு 'ரிபப்ளிக்' என்ற பெயரை வைக்கக் கூடாது... 
சேனல் பேர மாத்து: அர்னாப்புடன் மல்லுக்கட்டும் சுப்ரமணியன் சுவாமி!

புதுதில்லி: புகழ்பெற்ற தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி விரைவில் துவங்கவுள்ள செய்தி தொலைக்காட்சிக்கு 'ரிபப்ளிக்' என்ற பெயரை வைக்கக் கூடாது என்று பாரதிய ஜனதா தலைவர் சு.சுவாமி போர்க்கொடி தூக்கியுள்ளார்.     

இந்தியாவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி பத்திரிக்கையாளர்களில் ஒருவர் அர்னாப் கோஸ்வாமி. தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்த இவர்,கடந்த வருட இறுதியில் அங்கே இருந்து விலகினார். அதன்பின்னர் தாம் தனியாக செய்தி தொலைக்காட்சி ஒன்றைத் துவக்க இருப்பதாகவும், அதற்கு 'ரிபப்ளிக்' என்று பெயரிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி தன்னுடைய செய்தி தொலைக்காட்சிக்கு அந்தப் பெயரை வைக்கக்  கூடாது என்று பாரதிய ஜனதா தலைவர் சு.சுவாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'ரிபப்ளிக்' என்ற பெயரில் செய்தி தொலைக்காட்சி ஒன்றைத் துவக்க அனுமதி அளித்து இருப்பது 'தேசிய சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறைகேடாக பயன்படுத்துதல் தடை) சட்டம், 1950 -க்கு எதிரானதாகவும், சட்டத்தை மீறும் வகையிலும் அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சில குறிப்பிட்ட பெயர்கள் மற்றும் சின்னங்களை தொழில் மற்றும் வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்துவது இந்த சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. அதனுடைய 6-வது பிரிவின் படி,  'ரிபப்ளிக்' என்ற வார்த்தையை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுஉள்ளது. எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com