1986 - 2017 வரை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்து வந்த பாதைகள்...

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு -  சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) நடைமுறையை நாடு
1986 - 2017 வரை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்து வந்த பாதைகள்...

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு -  சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) நடைமுறையை நாடு முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மணி அடித்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் தொடங்கி வைத்தனர்.

இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதிலும் ஒரே சீரான வரிவிதிப்பு முறை வழக்கத்துக்கு வந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வு, உலக அரங்கில் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையை பறைசாற்றும் என மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சில பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை உயர வாய்ப்பிருந்தாலும், வரிஏய்ப்பு நடவடிக்கைகளும், கருப்புப் பணப் பரவலும் முழுமையாகத் தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பைக் கொண்டுவர கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே அச்சாரம் போடப்பட்டது.

1986-இல் மத்திய நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், வரிச் சீர்த்திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதன் பிறகு மத்தியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களால் அந்த முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. பின்னர், கடந்த 2000-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்து முதன்முதலில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, இதுகுறித்த மசோதாவை வகுக்க தனிக் குழு அமைக்கப்பட்டது. பிறகு அது திருத்தியமைக்கப்பட்டது.

பாஜகவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு அதில் மேலும் பல மாற்றங்களைச் செய்தது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு காட்சிகளும் மாறின. காங்கிரஸ் ஆட்சியின்போது ஜிஎஸ்டியை பாஜக எதிர்ப்பதும், பாஜக ஆட்சியின்போது காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்துவதும் என அரசியல் கட்சிகளின் சதிராட்டத்தில் சிக்கிக் கிடந்தது இந்த புதிய வரிவிதிப்புக் கொள்கை.

இந்நிலையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த தீவிர முயற்சிகளை முன்னெடுத்தது. அதன் விளைவாக, 17 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1986: 1986-87 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை உரையில் மத்திய நிதியமைச்சர் விஸ்வநாத் பிரதாப் சிங், ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பேசினார்.

2000: ஜிஎஸ்டி என்ற புதிய சொல் பதத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் வாஜ்பாய்,  ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கான மாதிரியை உருவாக்க மேற்குவங்க நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்றினை அமைத்தார்.

2003: வரி சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க விஜய் கேல்கர் தலைமையில் குழு ஒன்றினை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு அமைத்தது.

2004: ஏற்கனவே, உள்ள வரி விதிப்பு முறைக்குப் பதிலாக நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமலாக்கலாம் என்று அப்போதைய நிதியமைச்சக ஆலோசகர் விஜய் கேல்கர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

2006 பிப்ரவரி 28: நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை உரையில் முதல்முறையாக ஜிஎஸ்டி என்ற வார்த்தை இடம்பெற்றது. 2010 ஏப்ரல் 1க்குள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மாநில நிதியமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

2008: மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

2008 ஏப்ரல் 30: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறித்த மாதிரி மற்றும் செயல் திட்டம் என்ற தலைப்பில் அந்த குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

2009 நவம்பர் 10: ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து மக்கள் கருத்துகள் தொடர்பான அறிக்கையை குழு சமர்ப்பித்தது.

2009 அடிப்படை கட்டமைப்பு அறிமுகம்: தாஸ்குப்தா தலைமையிலான குழு வடிவமைத்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கான அடிப்படை கட்டமைப்பினை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை 2010 ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாஜக எதிர்ப்பு: ஜிஎஸ்டி வரிவிதிப்பு அடிப்படை கட்டமைப்புக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

2010 பிப்ரவரி: ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தும் நோக்கில் மாநிலங்களில் வணிக வரிவிதிப்புகளை கணினி மயமாக்கும் முயற்சியை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான காலக்கெடுவினை 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 தேதிக்கு மாற்றுவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

2011 மார்ச் 22: ஜிஎஸ்டி வரி விதிப்பை  அமல்படுத்துவதற்காக 115-வது அரசியலைமைப்பு சட்டத்தில் திருத்தத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தியது.

2011 மார்ச் 29: யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஜிஎஸ்டி மசோதா பரிந்துரைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு மாதிரி உருவாக்கத்துக்கான குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து அசிம் தாஸ்குப்தா பதவி விலகினார். அவருக்கு பதிலாக அன்றைய கேரள நிதியமைச்சர் கே.எம்.மணி நியமிக்கப்பட்டார்.

2012 நவம்பர்: மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்காக, அது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் டிசம்பர் 31, 2012க்குள் முடிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

2013 பிப்ரவரி: ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்துவதில் உள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டதாக நிதிநிலை அறிக்கை உரையில் அறிவித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஜிஎஸ்டி அமலானால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

2013 ஆகஸ்ட்: ஜிஎஸ்டி மசோதா தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதிவிவகாரங்களுக்கான நிலைக்குழு சமர்ப்பித்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரைத்தது. இதையடுத்து ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தட தயாரானது.

2013 அக்டோபர்: ஜிஎஸ்டி அமலானால் நாட்டுக்கு ஆண்டுதோறும் ரூ.14 ஆயிரம் கோடி அளவில் இழப்பு ஏற்படும் என்று அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இன்றைய பிரதமர்) எதிர்ப்புத் தெரிவித்தார்.

2014 நாடாளுமன்றம் கலைப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக்குழுவால் ஜிஎஸ்டிக்கு ஏற்பட்ட தடை நீங்கியது. பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியமைத்தது.

2014 டிசம்பர் 18: ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 122-வது சட்டதிருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2014 டிசம்பர் 19: அரசியலமைப்பு சட்டத்தின் 122-து திருத்தம் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது.

2015 பிப்ரவரி: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2016 ஏப்ரல் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலக்கெடு நிர்ணயித்து அறிவித்தார்.

2015 மே 6: ஜிஎஸ்டி வரி மசோதா மக்களவையில் நிறைவேறியது.

2015 மே 12: மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதிகபட்ச வரி விதிப்பு 18 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

2015 மே 14: மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவின் ஒப்புதலுக்காக ஜிஎஸ்டி மசோதா அனுப்பப்பட்டது.

2015 ஆகஸ்ட்: மாநிலங்களவையில் ஆளும் பாஜக அரசுக்கு போதிய ஆதரவு இல்லாததால் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசின் ஜிஎஸ்டி கொள்கைக்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவளிக்காமல் எதிர்ப்பு தெர்வித்து வந்தார்.

2016 ஆகஸ்ட்: ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது.

2016 ஆகஸ்ட் 3: மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது.

2016 செப்டம்பர் 2: ஜிஎஸ்டி மசோதா நாடு முழுவதும் 16 மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேறியது. இதையடுத்து ஜிஎஸ்டி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

2016 செப்டம்பர் 12: ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2016 செப்டம்பர் 22-23: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் முதல்முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடியது.

2016 நவம்பர் 3: 5,12,18 மற்றும் 28 என 4 விதமான வரி விதிப்பு முறைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இதுதவிர ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

2017 ஜனவரி 16: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

2017 பிப்ரவரி 18: ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாவதால் ஏற்படும் இழப்புகளை மாநிலங்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கான மசோதாவினை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்தது.

2017 மார்ச் 4: ஜிஎஸ்டி மசோதாவின் துணை மசோதாக்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

2017 மார்ச் 20: ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் மற்றும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2017 மார்ச் 27: ஜிஎஸ்டியின் 4 துணை மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகப்படுத்தினார். நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

2017 மே 18: 1,200க்கு மேற்பட்ட பொருட்களுக்கான வரியை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கான வரி விதிப்பு 5 சதவீதமாகவோ அல்லது வரி ஏதும் இல்லை என்ற பிரிவின் கீழ் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

2017 மே 19: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது.

2017 ஜூன் 21: ஜம்மு காஷ்மீர் தவிர அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் மாநில ஜிஎஸ்டி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2017 ஜூன் 28: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக விழாவைப் புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

2017 ஜூன் 29: காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சில எதிர்க்கட்சி கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்தன.

2017 ஜூன் 30: இரவு 10.55 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

    -நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடக்க உரையாற்றினார்.

2017 ஜுலை 1: சரியாக 12 மணியளவில் பிரணாப் முகர்ஜியும், மோடியும் பட்டனை அழுத்தி ஜிஎஸ்டியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலானது.  

- பல்வேறு நிலைகளைக் கடந்து இப்போது ஜிஎஸ்டி முழுமையடைந்து அமலுக்கு வந்துள்ளது. இதில் எனது பங்களிப்பும் இருந்தது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

- நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஜிஎஸ்டி உதாரணமாகத் திகழ்கிறது.

- பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதுபோல, 18 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஜிஎஸ்டி இறுதி வடிவம் பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com