ஜம்மு-காஷ்மீரில் அமலுக்கு வராத ஜிஎஸ்டி சட்டம்!

ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படாததை அடுத்து, அந்த மாநிலத்தில் மட்டும் ஜிஎஸ்டி அமலாவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படாததை அடுத்து, அந்த மாநிலத்தில் மட்டும் ஜிஎஸ்டி அமலாவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், ஜிஎஸ்டி சட்டம் வரும் 8-ஆம் தேதி கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜிஎஸ்டி சட்டமானது சனிக்கிழமை முதல் (ஜூலை 1) அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் சாசனத்தின்படி சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்துவது என்பது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப்பிரிவுக்கு புறம்பானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இதையடுத்து, ஜிஎஸ்டி சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஜம்மு-காஷ்மீரில் ஆளும் பிடிபி-பாஜக கூட்டணி அரசு ஏற்பாடு செய்தது.
இந்தக் கூட்டமானது கடந்த இரண்டு நாள்களாக ஸ்ரீநகரில் நடைபெற்று வந்தது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சில தொழில் கூட்டமைப்புகளும் இதில் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டியால் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு உறுதியளித்தது. ஆனால், இதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் இந்த விவகாரத்தில் சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் ஜிஎஸ்டி சட்டத்தை சனிக்கிழமை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், ஜிஎஸ்டி சட்டம் வரும் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று பாஜக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மாநில பாஜக அமைச்சர் ஒருவர் கூறியதாவது:
ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஜிஎஸ்டியை அமல்படுத்தும் முறை குறித்தும் இந்தக் கூட்டத்தொடரில் ஆலோசிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, வரும் 8-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டத்தை அரசு அமலுக்கு கொண்டு வரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com