புதிய அத்தியாயம் தொடக்கம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் மூலம் நாட்டில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதன் மூலம் நாட்டில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடக்க உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு 500 பாகங்களாக இருந்த நாட்டை ஒன்றுபட்ட இந்தியாவாக சர்தார் வல்லபபாய் படேல் ஒருங்கிணைத்ததுபோல, இப்போது ஜிஎஸ்டி மூலம் தேசத்தின் பொருளாதாரம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஜிஎஸ்டி உதாரணமாகத் திகழ்கிறது. நமது நாட்டின் பொருளாதார அமைப்பை ஜிஎஸ்டி முறைப்படுத்தும். நாட்டின் சுதந்திரம் பெற்ற நள்ளிரவு போல, இந்த நள்ளிரவும் முக்கியமானது.
பல கட்ட யோசனைகள், பல தரப்பு ஆலோசனைகள், மாநிலங்களின் ஒருங்கிணைப்பு என பல கட்டங்களை பல ஆண்டுகள் கடந்துதான் ஜிஎஸ்டி முழுமையடைந்துள்ளது. பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதுபோல, 18 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஜிஎஸ்டி இறுதி வடிவம் பெற்றுள்ளது.
இது ஒரு கட்சிக்கோ, ஓர் அரசுக்கோ கிடைத்த வெற்றியல்ல. நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். கருப்புப் பணம், கள்ளச் சந்தை நடவடிக்கைகள் ஜிஎஸ்டியால் ஒழியும். நாடு முழுவதும் ஒரே வரி விதிதம் இருப்பதால் விலையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் குறையும். வரி நிர்வாகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் ஏற்படும். ஜிஎஸ்டி- யால் ஏழை, எளிய மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் நலனை முக்கியமாகக் கருத்தில் கொண்டுதான் ஜிஎஸ்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் வரிச் சீர்திருத்தம் மட்டுமல்ல, பொருளாதாரச் சீர்திருத்தமும் கூட.
ஜிஎஸ்டி மூலம் பல விதமாக வரிகள் முடிவுக்கு வந்துள்ளன. ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்தது மட்டுமல்ல, மிக எளிமையான வரி விதிப்பு முறையாகும். வர்த்தகர்களையும், தொழில் முனைவோரையும் அதிகாரிகளின் பிடியிலிருந்து இருந்து ஜிஎஸ்டி விடுவித்துள்ளது. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் பயன்களை வர்த்தகர்கள் நுகர்வோருக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். ஜிஎஸ்டி- யை ஒவ்வொரு கட்டத்திலும் அருகில் இருந்து வடிவமைத்தவர்களில் இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முக்கியமானவர். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ள நமது தேசத்தில் மிக முக்கியமான நிகழ்வு. பல்வேறு நிலைகளைக் கடந்து இப்போது ஜிஎஸ்டி முழுமையடைந்து அமலுக்கு வந்துள்ளது. இதில் எனது பங்களிப்பும் இருந்தது என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
சரியாக 12 மணியளவில் பிரணாப் முகர்ஜியும், மோடியும் பட்டனை அழுத்தி ஜிஎஸ்டியை தொடங்கி வைத்தனர்.

விழாக்கோலம் பூண்டது நாடாளுமன்றம்
இந்த நிகழ்ச்சியையொட்டி நாடாளுமன்றமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் தேவெகெளடா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தொழிலதிபர் ரத்தன் டாடா, ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நாடாளுமன்ற எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com