ராணுவத்தை திரும்பப் பெற்றால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: சீனா

சிக்கிம் மாநில எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினர் திரும்பப் பெறப்பட்ட பிறகு அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினர் திரும்பப் பெறப்பட்ட பிறகு அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சிக்கிம் எல்லையில் நிலவும் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு, இந்திய, சீனத் தூதரகங்கள் வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியா-சீனா இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமெனில், சிக்கிம் எல்லையில் அமைந்துள்ள டோங்லாங் பகுதியில் இருந்து ராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும். இந்திய ராணுவத்தினர் வெளியேறிய பிறகே அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
டோங்லாங் பகுதியை பூடானும் உரிமை கொண்டாடி வருகிறது. பூடான் குறிப்பிடும் டோங்லாங் பகுதி, சீனாவுக்குச் சொந்தமானதாகும் என்றார் அவர்.
சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்குமிடத்தில் டோங்லாங் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் பெருமளவு இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், சிறிய அளவிலான பகுதி பூடானின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்நிலையில், டோங்லாங் பகுதிக்குள் கடந்த சில தினங்களுக்கு முன் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய நிலைகளைத் தாக்கி சேதப்படுத்தினர். மேலும், அந்தப் பகுதியில் அவர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர்களை முன்னேற விடாமல் தடுப்பதற்காக, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா கருத்து: இதனிடையே, சிக்கிம் எல்லையில் சீனா சாலை அமைப்பது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு விஷயங்களில், தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுததொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், '' சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்வது மிகுந்த கவலையை அளிக்கிறது. சீனாவின் செயல்பாடுகள், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானசரோவர் யாத்திரை நிறுத்தம்: இதனிடையே, சிக்கிம் மாநில எல்லை வழியாக மேற்கொள்ளப்படும் கைலாச மானசரோவர் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் நுழைவாயில் வழியாகத் திட்டமிட்டபடி யாத்திரை தொடரும் என்று இந்திய அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சிக்கிம் வழியாக, மானசரோவருக்குப் புறப்பட்டுச் சென்ற யாத்ரீகர்கள், நாதுலா கணவாய் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பயணத்தை தொடராமல் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com