ஹெச்1பி விசா விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் ஏன் பேசவில்லை?: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

ஹெச்1பி விசா விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பேச்சுவார்த்தையின்போது ஏன் எழுப்பவில்லை? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஹெச்1பி விசா விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் ஏன் பேசவில்லை?: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

ஹெச்1பி விசா விவகாரம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பேச்சுவார்த்தையின்போது ஏன் எழுப்பவில்லை? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வெள்ளிக்கிழமை பேசினார். அப்போது அவர், இதுதொடர்பாக கூறியதாவது:
அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பு, இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. டொனால்ட் டிரம்ப்பிடம், ஹெச்1பி விசா விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. ஏனெனில், அமெரிக்காவின் நடவடிக்கையால், அந்நாட்டுக்குச் செல்லும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், அகதிகள் போன்று நடத்தப்படக் கூடும்.
ஆனால், டிரம்ப்பிடம் பிரதமர் மோடி இதுகுறித்து பேசவில்லை. அமெரிக்க அதிபரிடம் இருந்து போதிய வாக்குறுதி எதுவும் பெறாமல், பிரதமர் மோடி நாடு திரும்பிவிட்டார். இந்த விவகாரத்தில் அவர் ஏன் அமைதி காத்தார்? இதுகுறித்து நாட்டு மக்களுக்கு மோடி விளக்கமளிக்க வேண்டும்.
சீனா, பாகிஸ்தான் நாடுகளால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எப்படி மத்திய அரசு கையாளப் போகிறது என்பது குறித்து மூத்த எதிர்க்கட்சித் தலைவரிடம் மத்திய அரசு விளக்க வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் சட்டம் (ஜிஎஸ்டி) அமலுக்கு வருவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதென்ற காங்கிரஸின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சில மணி நேரத்துக்கு முன்பு கோரிக்கை விடுப்பதற்கும், அதை உடனடியாக மறுபரிசீலனை செய்வதற்கும் இதுவொன்றும் சாதாரண விஷயமில்லை. நாடாளுமன்ற மரபுகள், நாட்டின் பாரம்பரியத்தை கவனத்தில் கொண்டு, இந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்தது.
கடந்த காலங்களிலும் பல்வேறு சாதனைகள், பிரச்னைகள் வந்துள்ளன. ஆனால், அப்போதெல்லாம் நாடாளுமன்ற கூட்டம் நள்ளிரவில் கூட்டப்பட்டதில்லை. கடந்த 1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தானை இந்தியா போரில் தோற்கடித்தது. இதனால் வங்கதேசம் சுதந்திரமடைந்தது. பாகிஸ்தான் படையினர் இந்தியாவிடம் சரணடைந்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் சிறப்புக் கூட்டத்தை கூட்டவில்லை.
இதேபோல், அணுகுண்டு சோதனை, விண்வெளி ஆராய்ச்சி, பொருளாதார சீர்திருத்தங்கள் போன்ற மிகப்பெரிய நிகழ்வுகளின்போதும், நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நள்ளிரவில் கூட்டப்பட்டதில்லை. இப்போது மட்டும் ஏன் நள்ளிரவில் கூட்டப்படுகிறது? என்றார் ஆனந்த் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com