சீன எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு

சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக, கூடுதல் படையினரை இந்தியா குவித்துள்ளது.
சீனா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்.
சீனா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்.

சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக, கூடுதல் படையினரை இந்தியா குவித்துள்ளது.

எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுவதை அடுத்து, இந்தியாவும், சீனாவும், தங்களது ராணுவ வீரர்களை ஒரு மாதமாக நிறுத்தி வைத்துள்ளன.
1962}ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு, இரு நாட்டு ராணுவத்தினரும் மோதல் போக்குடன் நீண்ட நாள்கள் முகாமிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
எனினும், போருக்குத் தயாராகாத நிலையில், இந்திய வீரர்கள், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சிக்கிம் அருகே இந்தியா}பூடான்}திபெத் சந்திக்கும் பகுதி டோகா லா என்று அழைக்கப்படுகிறது. இதை டோகாலாம் என்று பூடானும், டோங்லாங் என்று சீனாவும் அழைக்கின்றன.
இந்தப் பகுதியின் பெருமளவு இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், சிறிய அளவிலான பகுதி பூடானின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அந்த இடத்தில், இந்திய ராணுவம் கடந்த 2012}ஆம் ஆண்டு அமைத்திருந்த இரு ராணுவ நிலைகளை, அகற்றுமாறு சீன ராணுவம் கடந்த ஜூன் மாதம் 1}ஆம் தேதி கேட்டுக் கொண்டது.
அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவம், அந்த இரு நிலைகளும் பாதுகாப்புக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதி, அவற்றை அகற்ற மறுத்துவிட்டது.
ஆனால், அந்த இரு ராணுவ நிலைகளையும், புல்டோசர் உதவியுடன் சீன ராணுவம் கடந்த ஜூன் மாதம் 6}ஆம் தேதி இரவோடு இரவாக இடித்துத் தள்ளியது. மேலும், அங்கு சாலை அமைக்கும் பணியிலும் சீன ராணுவம் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, அங்கு முன்னேறிய இந்திய ராணுவம், சீன ராணுவத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திவிட்டது.
மேலும், அருகில் உள்ள முகாம்களில் இருந்தும் இந்திய வீரர்கள் அங்கு குவிந்தனர். அப்போது, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து, கைகலப்பு ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதையடுத்து, எல்லைப் பகுதியில் கூடுதலாக இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
யாத்ரீகர்கள் தடுத்து நிறுத்தம்: இதனிடையே, சிக்கிம் மாநிலம் வழியாக, திபெத்தில் உள்ள கைலாச மானசரோவருக்கு யாத்திரை சென்ற முதல் குழுவினர், நாதுலா கணவாய் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பிறகு, பயணத்தைத் தொடர முடியாமல் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர்.
அதைத் தொடர்ந்து, சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங், கடந்த வியாழக்கிழமை கூறினார்.
அத்துடன் இந்திய ராணுவத்தினர் அத்துமீறியதாக புகைப்படம் ஒன்றையும் காண்பித்தார். மேலும், கடந்த 1962}ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில், சீனாவிடம் இந்தியா தோல்வியடைந்ததை நினைவுபடுத்தும் விதமாக, முந்தைய வரலாற்றில் இருந்து இந்திய ராணுவம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஜேட்லி பதிலடி: அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1962}ஆம் ஆண்டில் இருந்த நிலை, இப்போது இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
1962}ஆம் ஆண்டின் நிலைமையை சீனா நினைவுபடுத்த விரும்பினால், 2017}ஆம் ஆண்டின் நிலைமை வேறு விதமாக இருக்கும் என்று ஜேட்லி பதிலடி கொடுத்தார்.
அதையடுத்து, இந்தியா, சீனா இடையே நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இருநாட்டுத் தூதரகங்கள் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறினார்.
எனினும், சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தினர் திரும்பப் பெறப்பட்ட பிறகே, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா கவலை: அதைத் தொடர்ந்து, சீனாவின் செயல்பாடு, இந்தியா}சீனா இடையேயான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

வரைபடம் வெளியீடு

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் இடத்தின் வரைபடத்தை சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்தப் படத்தில், சீன ராணுவத்தினரின் சாலை அமைக்கும் பணியைத் தடுப்பதற்காக, இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் இடம், ஊதா நிற அம்புக்குறியால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இரண்டு புகைப்படங்களை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் வியாழக்கிழமை வெளியிட்டார். பின்னர் அந்த புகைப்படங்கள், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அதில், இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான புல்டோசர் வாகனங்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சீனப் பகுதிகள், சிவப்பு மையால் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனால், எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. எனவே, பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் கூடுதல் படையினரை இந்திய ராணுவம் அங்கு குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com