சீனாவின் படை பலமும் அதிகரித்துள்ளது: ஜேட்லிக்கு சீனா பதில்

இந்தியாவின் படை பலம் மட்டுமல்ல, இப்போது சீனாவின் படை பலமும் அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவின் படை பலம் மட்டுமல்ல, இப்போது சீனாவின் படை பலமும் அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
சிக்கிம் மாநிலம் டோங்லாங் பகுதியை அத்துமீறி ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை இந்திய ராணுவம் அண்மையில் முறியடித்தது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக விமர்சித்த சீனா, 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீனப் போரில் இந்தியா தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி வரலாறு கற்றுத் தந்த பாடங்களை மறந்துவிடக் கூடாது என்று மிரட்டல் விடுத்திருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்த அருண் ஜேட்லி , இந்தியாவில் 1962-ஆம் ஆண்டில் நிலவிய சூழ்நிலை இப்போது இல்லை. 2017-ஆம் ஆண்டில் இந்தியா முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது. எனவே, இந்தியாவின் படை பலத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பதிலடி கொடுத்தார்.
ஜேட்லிக்கு பதில்: இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அவர் (ஜேட்லி) கூறியது சரிதான். 1962-ஆம் ஆண்டில் இருந்ததுபோல 2017-ஆம் ஆண்டில் இந்தியா இல்லைதான். அதேபோல சீனாவும் அப்போது இருந்த நிலையிலேயே இப்போதும் இல்லை, முற்றிலும் மாறிவிட்டது. தேசத்தின் இறையாண்மையைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.
1890-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீன-பிரிட்டன் ஒப்பந்தத்தை இந்தியா மதிக்க வேண்டும். சீனப் பிராந்தியமான டோங்லாங்கில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும். பூடானைப் பயன்படுத்தி தங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மூடி மறைக்க இந்தியா முயற்சிக்கிறது.
துரோகக் குற்றச்சாட்டு: சீன-பிரிட்டன்ஒப்பந்தத்தை ஏற்பதாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முன்பு சீனாவுக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து இந்தியாவில் அமைந்த அரசுகளும் அந்த ஒப்பந்தத்தை மதித்தன. ஆனால், இப்போது இந்தியா, சீனாவுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்றார் அவர்.
டிரம்ப்பை கவர...: இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள சீன அரசுப் பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' இந்தியா-சீனா இடையே இப்போது எழுந்துள்ள பிரச்னைக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளவும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் சீனாவுடன், இந்தியா எல்லைப் பிரச்னையை எழுப்புகிறது. இந்திய- பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவைக் கொண்டு சீனாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளது.
சீனாவின் அத்துமீறல்: சிக்கிம் மாநிலத்தில் இந்தியா, பூடான், திபெத் ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் டோகா லா பகுதி உள்ளது. இதை டோகாலாம் என்று பூடானும், டோங்லாங் என்று சீனாவும் அழைக்கின்றன. இதில் பெரும் பகுதி இந்தியக் கட்டுப்பாட்டிலும், சிறிய பகுதி பூடான் கட்டுப்பாட்டிலும் உள்ளது. தங்கள் பகுதியை இந்திய ராணுவம் பாதுகாக்க பூடான் ஏற்கெனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
திபெத்தை ஏற்கெனவே ஆக்கிரமித்து தங்கள் நாட்டின் பகுதியாக அறிவித்துவிட்ட சீனா, டோங்லாங் பகுதிக்குள் அங்கு அத்துமீறி நுழைந்து சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அப்பகுதிக்குள் கடந்த சில நாள்களுக்கு முன்பு அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், இந்திய ராணுவம் அமைத்திருந்த பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். எனினும், அவர்களை முன்னேறவிடாமல் இந்திய ராணுவம் தடுத்து விட்டது. கூடுதலாக இந்திய வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com