யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு: ராஜிநாமா எச்சரிக்கையை வாபஸ் பெற்றார் உ.பி. அமைச்சர்

உத்தரப் பிரதேச மாநிலம், காஜிபூர் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யவில்லையெனில் தனது பதவியை ராஜிநாமா செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த அந்த மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ்

உத்தரப் பிரதேச மாநிலம், காஜிபூர் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யவில்லையெனில் தனது பதவியை ராஜிநாமா செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த அந்த மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசியதையடுத்து தனது எச்சரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்பர், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் அமைச்சராக உள்ளார்.
இதனிடையே, ராஜ்பருக்கும், காஜிபூர் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் தாத்ரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும்; இல்லையெனில் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய நேரிடும்' என்று ராஜ்பர் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தில்லி சென்றிருந்த யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்துக்கு திங்கள்கிழமை திரும்பி வந்தார். அப்போது அவரை ராஜ்பர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, தனது ராஜிநாமா எச்சரிக்கையை ராஜ்பர் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து லக்னௌவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
19 கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தேன். அதில் 17 கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டார். அவரது வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டு, ராஜிநாமா தொடர்பான எனது எச்சரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டேன். காஜிபூரில் நான் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த தர்னா போராட்டத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டேன் என்றார் ராஜ்பர்.
அப்போது அவரிடம், எஞ்சிய 2 கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'அந்த 2 கோரிக்கைகளையும் ஆய்வு செய்வதாக முதல்வர் தெரிவித்தார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com