ஜிஎஸ்டி: பொருள்கள் மீது புதிய விலையை அச்சிடுவது எப்படி? மத்திய அரசு விளக்கம்

சரக்கு- சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) பிந்தைய விலையை பொருள்கள் மீது எவ்வாறு அச்சிட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.

சரக்கு- சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) பிந்தைய விலையை பொருள்கள் மீது எவ்வாறு அச்சிட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பு உற்பத்தி செய்த பொருள்கள் பல இப்போது புதிய வரி விதிப்பின்கீழ் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றில் சில பொருள்களின் விலை குறைந்துள்ளது. வேறு சில பொருள்கள் ஜிஎஸ்டி- க்குப் பிறகு அதிகரித்துள்ளன. எனவே, பொருள்கள் மீது விலையை எவ்வாறு மாற்றி அச்சிடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறை அவினாஷ் ஸ்ரீவத்ஸவா தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பொருள்களின் விலை கூடியிருந்தாலும், குறைந்திருந்தாலும் அவற்றை பொருள்களின் மீது அச்சிட வேண்டியது அவசியம். அதே நேரத்தில், ஏற்கெனவே அச்சிடப்பட்ட அதிகபட்ச விலையை மறைத்துவிட்டு அதற்கு மேல் புதிய விலை அச்சிடக் கூடாது. பழைய விலையை நுகர்வோர் தெரிந்து கொள்ளும் வகையில் அதற்கு அருகில் புதிய விலையை அச்சிட வேண்டும். செப்டம்பர் 30- ஆம் தேதி வரை மட்டும்தான் இவ்வாறு புதிய விலையை அச்சிட அனுமதி உண்டு.
ஜிஎஸ்டி- யால் விலை குறைந்த பொருள்கள் எவை என்பதையும், விலை அதிகரித்துள்ள பொருள்கள் எவை என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விலை குறைப்பின் பயன் நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது.
பொருள்களின் விலை கூடியிருந்தால் அது தொடர்பாக உற்பத்தியாளர், அல்லது இறக்குமதி செய்து விற்பனை செய்பவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com