தொலைபேசியில் மிரட்டல்: மேற்கு வங்க ஆளுநர் மீது மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி தம்மை மிரட்டும் வகையிலும், அவமதிக்கும் தொனியிலும் தொலைபேசியில் உரையாடியதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி
தொலைபேசியில் மிரட்டல்: மேற்கு வங்க ஆளுநர் மீது மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி தம்மை மிரட்டும் வகையிலும், அவமதிக்கும் தொனியிலும் தொலைபேசியில் உரையாடியதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யலாம் என்ற எண்ணம் கூட தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மாநிலத்தின் ஆளுநர் போல அல்லாமல் பாஜக வட்டத் தலைவர் போன்று திரிபாடி செயல்படுகிறார் என்றும் மம்தா சாடியுள்ளார்.
ஆனால், இந்தப் புகார்களை திட்டவட்டமாக மறுத்துள்ள மேற்கு வங்க ஆளுநர், தொலைபேசியில் மிரட்டும் தொனியில் தாம் பேசவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
தில்லி, புதுச்சேரியைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும், மாநில முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது தற்போது பட்டவர்த்தனமாகியுள்ளது. மேலும், அந்த மாநிலத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வித்திட்டுள்ளது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது மாநில ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதுதொடர்பாக மம்தா கூறியதாவது:
மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி தொலைபேசியில் என்னுடன் பேசினார். மாநிலத்தின் சட்டம் -  ஒழுங்கு தொடர்பாக அவர் உரையாடினார். அப்போது அவர் பேசிய விதம் என்னை மிரட்டும் வகையிலும், அவமதிக்கும் தொனியிலும் இருந்தது.
ஆளுநராக இருந்து கொண்டு இவ்வாறு பேசக் கூடாது என்று அவரிடம் நான் தெரிவித்தேன். அந்த உரையாடல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். அவர் பேசிய விதம், முதல்வர் பதவியிலிருந்து விலகி விடலாமா என்ற எண்ணத்தைக்கூட எனக்குள் உருவாக்கியது. மாநிலத்தின் உயரிய பொறுப்புக்கு தம்மை நியமித்திருக்கிறார்கள் என்பதை அவர் முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும். அதேவேளையில், எவருடைய தயவிலும் நான் இந்தப் பதவிக்கு (முதல்வர்) வரவில்லை என்பதையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆளுநர் போல அல்லாமல் பாஜக வட்டத் தலைவர் போன்று திரிபாடி செயல்படுகிறார் என்றார் அவர்.
ஆளுநர் மறுப்பு: இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகளை ஆளுநர் திரிபாடி மறுத்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஆளுநர் என்பவர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். அவர்களைப் பாதுகாக்கும் உயரிய கடமை அவருக்கு உண்டு. மாறாக எந்த ஒரு கட்சிக்கோ அல்லது தனி நபருக்கோ அவர் சாதகமாக இருக்க முடியாது.
மாநில ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான உரையாடல் முழுக்க, முழுக்க ரகசியம் காக்கப்பட வேண்டிய விஷயம். அதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று எவரும் எதிர்பார்க்க இயலாது. மம்தாவுடனான உரையாடலில் அவரை அவமதிக்கும் வகையில் ஆளுநர் திரிபாடி பேசவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநரைக் குற்றம்சாட்டி மாநில முதல்வர் தெரிவித்த கருத்துகளும், வார்த்தைகளும் திகைப்பாக உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com