பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற மீண்டும் வாய்ப்பு?: மத்திய அரசு பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள மீண்டும் வாய்ப்பு அளிப்பது குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) பரிசீலிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற மீண்டும் வாய்ப்பு?: மத்திய அரசு பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள மீண்டும் வாய்ப்பு அளிப்பது குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) பரிசீலிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக கடந்த நவம்பர் 8- ஆம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த மத்திய அரசு, அதற்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும், டெபாசிட் செய்யவும் கடந்த டிசம்பர் 30- ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த மார்ச் 31- ஆம் தேதி வரை ஆர்பிஐ கிளைகளில் மட்டும் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதிக்கப்பட்டது. அந்த காலகட்டத்துக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது.
எனினும், கடந்த 3 மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென்று கோரி உச்ச நீதின்றத்தில் சுதா மிஸ்ரா என்பவர் உள்பட பல்வேறு தரப்பின் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், டி.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஒருவர் எவ்விதத் தவறும் செய்யாத நிலையில், அவர்கள் கையில் இருந்த பணம் மதிப்பிழந்துவிட்ட நிலைக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய மத்திய அரசு அவகாசம் அளித்த காலகட்டத்தில் ஒருவர் சிறையில் இருந்தால், அவர் எப்படி தன்னிடம்இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியிருக்க முடியும்? இதுபோன்ற பல்வேறு சூழ்நிலைகளில் சிக்கியிருந்தவர்கள் பழைய நோட்டுகளை மாற்றியிருப்பது மிகவும் கடினம் என்று நீதிபதிகள் கூறினர்.
'இது குறித்து விரிவாக ஆலோசித்து, பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டறிந்து அவற்றைப் பெற்றுக் கொள்வது குறித்து முடிவு செய்ய கால அவகாசம் வேண்டும்' என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை உரிய காரணத்துடன் மீண்டும் டெபாசிட் செய்ய பொதுமக்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்துப் பரிசீலிக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் 2 வார கால அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, இதே வழக்கு விசாரணையின்போது, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மார்ச் 31- ஆம் தேதி வரை அனைவருக்கும் கால அவகாசம் அளிப்பதாகக் கூறிய மத்திய அரசு, பின்னர் அதனை டிசம்பர் 30- ஆம் தேதியாக மாற்றியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com