புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி: நாளை பதவியேற்கிறார்

நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி (64) மத்திய அரசால் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் வியாழக்கிழமை (ஜூலை 6) அப்பதவியை ஏற்கவுள்ளார்.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி: நாளை பதவியேற்கிறார்

நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி (64) மத்திய அரசால் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் வியாழக்கிழமை (ஜூலை 6) அப்பதவியை ஏற்கவுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் நஜீம் ஜைதி, அச்சல் குமார் ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகிய 3 பேர் தேர்தல் ஆணையர்களாக தற்போது உள்ளனர். இவர்களில் நஜீம் ஜைதி தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கிறார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நஜீம் ஜைதி புதன்கிழமை (ஜூலை 5) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அச்சல் குமார் ஜோதியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர் பதவியில் நியமிக்கப்படும் ஒருவர், 6 ஆண்டுகளோ அல்லது 65 வயதாகும் வரையிலோ -  இந்த இரண்டில் எது முன்கூட்டி வருகிறதோ அதுவரை அப்பதவியை வகிக்கலாம். அதன்படி, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் அச்சல் குமார் ஜோதி, அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 17- ஆம் தேதி வரை அந்தப் பதவியில் நீடிப்பார்.
அவர், நாட்டின் 21- ஆவது தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். கடந்த 1975- ஆம் ஆண்டில் ஐஏ'எஸ் அதிகாரியாகத் தேர்வான அவர், இதற்கு முன்பு குஜராத் மாநில அரசுத் துறைகளில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அந்த மாநிலத்தின் தலைமைச் செயலராக ஜோதி பணிபுரிந்தார். பிறகு அந்தப் பதவியில் இருந்து கடந்த 2013- ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திலுள்ள 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அச்சல் குமார் ஜோதி 2015- ஆம் ஆண்டு மே மாதம் 8- ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, குஜராத் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர், நிதித்துறை முதன்மைச் செயலர், கண்ட்லா துறைமுகக் கழகத் தலைவர், சர்தார் சரோவர் நர்மதா நிகம் நிறுவனத்தின் மேலாளர் போன்ற பதவிகளையும் அவர் வகித்துள்ளார். குஜராத் மாநில தொழில்துறை, வருவாய்த் துறை, நீர் விநியோகத் துறை ஆகியவற்றின் செயலராகவும் அவர் பணி புரிந்துள்ளார்.
குஜராத் மாநில நிதித்துறை முதன்மைச் செயலராக அச்சல் குமார் ஜோதி பணிபுரிந்தபோது, மின்னணு முறை கொள்முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்துக்கு, பல்வேறு துறைகளிலும் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும், மாவட்ட, தாலுகா அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் அத்திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
கடந்த 1953- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23- ஆம் தேதி பிறந்த அச்சல் குமார் ஜோதிக்கு தற்போது 64 வயது ஆகிறது. சட்டவிதிப்படி, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவர் 65 வயது வரைதான் அந்தப் பதவியில் நீடிக்க முடியும். எனவே அவரது பதவிக்காலம் சுமார் 7 மாதங்களுடன் நிறைவடையும்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்த சூழ்நிலையில், அவரால் மிக உயர்ந்த பதவியில் நியமிக்கப்பட்ட கடைசி நபராக அச்சல் குமார் ஜோதி கருதப்படுகிறார்.
மேலும் ஓர் ஆணையர் விரைவில் நியமனம்: தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஓய்வு பெறுவதால், 3 தேர்தல் ஆணையர் பதவிகளில் ஓரிடம் காலியாகிறது.
இதை நிரப்பும் வகையில், மேலும் ஒரு தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமிக்கவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com