இந்தியா வரும் சீனர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்க பரிசீலனை: சீனா அறிவிப்பு

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக சீனா கூறியுள்ளது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக சீனா கூறியுள்ளது.
சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோகா லா பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருவதால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சீன பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜின் சுவாங் கூறியதாவது:
இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள சீன நாட்டவர்கள் மற்றும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
ஏனெனில், உலகின் எந்தப் பகுதியில் சீனர்கள் இருந்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
சீனாவுக்கும், இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டனுக்கும் இடையே 1890-ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா புறக்கணித்துவிட்டது. மேலும், இந்தியா-சீனா-பூடான் எல்லையில் டோகா லா பகுதி இருப்பதாகக் கூறுகிறது. இது தவறான தகவல். 1890-ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி சிக்கிம் மாநில எல்லை கிழக்குப் பகுதி மலையில் தொடங்குகிறது. ஆனால், இப்போது அப்பகுதியில் இருந்து 2000 மீட்டர் தொலைவில்தான் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொள்கிறது. இந்திய வீரர்கள், சீன வீரர்களின் பணியைத் தடுத்த இடத்துக்கும் மூன்று நாடுகளின் எல்லைக்கும் தொடர்பே இல்லை.
ஆனால், மூன்று நாட்டு எல்லையில்தான் பிரச்னை நிகழ்ந்தது என்ற தவறான தகவலை இந்தியா தனது நாட்டு மக்களுக்கு அளித்து வருகிறது. மேலும் டோகா லா பகுதி குறித்து பூடானுடன் சீனாவுக்கு எந்த எல்லைப் பிரச்னையும் இல்லை என்றார் அவர்.
முன்னதாக, இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று சீன அரசு பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' செய்தி வெளியிட்டது.
சிக்கிம் மாநில எல்லையான டோகா லா பகுதியில் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்க சீன ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவம் அண்மையில் முறியடித்தது. இந்த விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே அறிக்கைப் போர் நடைபெற்று வருகிறது. டோகா லா பகுதி பண்டைய காலத்தில் இருந்து சீனாவுக்கு உள்பட்ட பகுதி என்று கூறி வரும் சீனா, இந்தியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல் தொனியிலும் பேசி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com