பயங்கரவாதத்தை ஒடுக்க இணைந்து போராடுவோம்: பிரதமர் மோடி- நெதன்யாகு கூட்டாக அறிவிப்பு

''பயங்கரவாதத்தை ஒடுக்க இணைந்து போராடுவோம்'' என்று பிரதமர் நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கூட்டாகத் தெரிவித்தனர்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த சிறுவன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்க்கை, ஜெருசலேம் நகரில் புதன்கிழமை சந்தித்து ஆரத் தழுவிய பிரதமர் மோடி. உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த சிறுவன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்க்கை, ஜெருசலேம் நகரில் புதன்கிழமை சந்தித்து ஆரத் தழுவிய பிரதமர் மோடி. உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

''பயங்கரவாதத்தை ஒடுக்க இணைந்து போராடுவோம்'' என்று பிரதமர் நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கூட்டாகத் தெரிவித்தனர்.
மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜெருசலேம் நகரில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள், ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு, விவசாயம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தலைவர்கள் இருவரும் விவாதித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு மோடியும், நெதன்யாகுவும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மோடி கூறியதாவது:
இந்தியா, இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு இடையே நீண்ட கால பந்தம் உருவாகும் விதமாகவும், முக்கியப் பிரச்னைகளுக்கு இரு நாடுகளும் முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், ஒரு வலுவான உறவை கட்டமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். இதற்காக, இந்தியக் கலாசார மையம் ஒன்று இஸ்ரேலில் உருவாக்கப்படும்.
இந்தியாவும், இஸ்ரேலும் சிக்கலான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் தங்களின் பிராந்திய அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் விஷயங்களை நன்கு அறிந்து கொண்டுள்ளன.
இஸ்ரேலைப் போலவே, இந்தியாவும் பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பயங்கரவாதம், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நெதன்யாகுவுடன் விவாதித்தேன்.
இரு நாட்டு நலன்களைப் பாதுகாக்கவும், அதிகரித்து வரும் இணையவழித் தாக்குதல் உள்பட பயங்கரவாதத்துக்கு எதிரானபோராட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கும் நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம் என்று மோடி கூறினார்.
அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது:
மும்பையில், கடந்த 2008- ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், மிகக் கொடூரமானது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு இஸ்ரேலும், இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று நெதன்யாகு கூறினார்.
பின்னர், இரு தலைவர்களின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை பிரதமர் மோடியும், நெதன்யாகுவும் சரியென்று ஒப்புக் கொண்டனர்.
எனவே, பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடுவதற்கு இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர். மேலும், எக்காரணத்தைக் கொண்டும் பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளுக்கும், அவர்களின் குழுக்களுக்கும், பயங்கரவாதக் கட்டமைப்புகளுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
மேலும், பயங்கரவாதிகளுக்கும், அவர்களது குழுக்களுக்கும் நிதியுதவி அல்லது அடைக்கலம் கொடுத்து, அவர்களின் செயல்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் வலியுறுத்தினர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச அளவிலான ஒப்பந்தம் (சிசிஐடி) விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மோடியும், நெதன்யாகுவும் வலியுறுத்தினர் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 ஒப்பந்தங்கள் கையெழுத்து: முன்னதாக, புதுமைக் கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம், நீர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக, இந்தியா, இஸ்ரேல் இடையே மொத்தம் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொழில் துறையில், இரு நாடுகளுக்கு இடையே தொழில் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, இரு நாடுகளும் இணைந்து தலா 2 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.129 கோடி) பங்களிப்புடன் நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
நீர் வளத் துறையில், நீர் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வது, இந்தியாவில் மாநில நீர்ப் பங்கீட்டில் சீர்திருத்தம் கொண்டு வருவது ஆகியவை தொடர்பாக 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வேளாண் துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு (2018 முதல் 2020 வரை) இணைந்து செயல்படுவது என்று இந்தியாவும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதுதவிர, இந்திய விண்வெளி ஆராய்ச்சி, சிறிய ரக செயற்கைக்கோள்களை தயாரித்தல் உள்ளிட்டவை தொடர்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரேல் விண்வெளி முகவாண்மை இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவை நேசிக்கிறேன்: இஸ்ரேலிய சிறுவன்
''இந்தியப் பிரதமர் மோடியையும், இந்திய மக்களையும் நேசிக்கிறேன்' என்று மும்பைத் தாக்குதலில் உயிர் பிழைத்த இஸ்ரேலிய சிறுவன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்க், மோடியிடம் கூறினார்.
கடந்த 2008- ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், நாரிமன் இல்லத்தில் நேரிட்ட குண்டு வெடிப்பில், தனது பெற்றோரை இழந்த இஸ்ரேலியச் சிறுவன், இஸ்ரேலில் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறான். தற்போது, 11 வயதாகும் அந்தச் சிறுவனை மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, 'இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்; உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நீண்ட கால விசா வழங்கப்படும்'' என்று மோஷியிடம் பிரதமர் உறுதியளித்தார்.
பிறகு, ஹிந்தி மொழியில் பேசிய அந்தச் சிறுவன், ''எப்போதும் என் மீது அன்பு செலுத்துங்கள்; எனது பெற்றோரை நினைவில் கொள்ளுங்கள். நான் வளர்ந்து பெரியவனான பிறகு மும்பைக்கு வருவேன். பிரதமர் மோடியையும், இந்திய மக்களையும் நேசிக்கிறேன்'' என்றான்.
பிறகு மோடிக்கு புகைப்படம் ஒன்றை அந்தச் சிறுவன் பரிசளித்தான். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, அந்தச் சிறுவனுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com