மேற்குவங்கத்தில் வகுப்பு மோதல்: பதற்றம் தணிந்தது

மேற்கு வங்கத்தின் பதுரியாவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் உருவான பதற்றம் தணிந்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் பதுரியாவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் உருவான பதற்றம் தணிந்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பதுரியா பகுதியில் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர் முகநூலில் (ஃபேஸ்புக்) பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இரு பிரிவினரிடையே திங்கள்கிழமை இரவு மோதல் வெடித்தது. இதில் பல வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியது.
பதுரியா பகுதியில் ஏற்பட்ட மோதல் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் பரவியது. இதனால், துணை ராணுவப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாநில போலீஸாருடன் இணைந்து அவர்கள் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை அப்பகுதியில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. எனினும், பெரும்பாலான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் தொடர்ந்து 2-ஆவது நாளாக மூடப்பட்டிருந்தன. உள்ளூர் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தன. வன்முறை நடைபெற்ற பகுதிகளில் பாதுகாப்புக்காக ஏராளமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
வன்முறையாளர்கள் சாலைகளில் ஏற்படுத்தியிருந்த அனைத்து தடுப்புகளையும் பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்திவிட்டனர். மாவட்டத்தின் எந்த பகுதியிலும் புதன்கிழமை வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறைக்குக் காரணமான முகநூல் பதிவு தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com