இதுதான் ஒரே தேசம்; ஒரே வரியா?: ஜிஎஸ்டி விவகாரத்தில் ப.சிதம்பரம் கேள்வி

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 7 வகையான வரிவிகிதங்களை நிர்ணயித்துவிட்டு ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கத்தை மத்திய அரசால் எப்படி முன்வைக்க முடிகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
இதுதான் ஒரே தேசம்; ஒரே வரியா?: ஜிஎஸ்டி விவகாரத்தில் ப.சிதம்பரம் கேள்வி

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் 7 வகையான வரிவிகிதங்களை நிர்ணயித்துவிட்டு ஒரே தேசம், ஒரே வரி என்ற முழக்கத்தை மத்திய அரசால் எப்படி முன்வைக்க முடிகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருந்த உண்மையான ஜிஎஸ்டி சட்டம் எது? என்பது குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய பாஜக அரசு கடந்த 1-ஆம் தேதி முதல் கொண்டுவந்தது. முழுமை பெறாத ஜிஎஸ்டி சட்டத்தை அவசரகதியில் நடைமுறைப்படுத்துவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் தொடர்ச்சியாக, ஜிஎஸ்டி அமலாக்கம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியையும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை புறக்கணித்தன.
இந்தச் சூழலில், மத்திய முன்னாள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிவிதிப்பு முறையை கடுமையாக விமர்சித்து வருகிறார். தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுதொடர்பாக கூறியதாவது:
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரத் திட்டமிட்ட ஜிஎஸ்டி சட்டம் இதுவல்ல. தற்போது அமலாகி இருக்கும் வரிவிதிப்பு நடைமுறை முழுக்க, முழுக்க குறைபாடுகள் நிறைந்தவையாக உள்ளது. சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு 0.25, 3, 5, 12, 18, 28, 40 என வரிவிகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, மாநில அரசுகளும் சூழலுக்குத் தக்கவாறு சில கட்டணங்களை பொருள்கள் மீது விதிக்கும். பிறகு எப்படி ஜிஎஸ்டியை ஒரே தேசம், ஒரே வரி என்று பிரகடனப்படுத்த முடியும்? மோடி தலைமையிலான பாஜக அரசு ஜிஎஸ்டி சட்டத்தையே கேலிப் பொருளாக்கிவிட்டது.
இந்த புதிய வரிவிதிப்பு கொள்கையானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஓர் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இதுவல்ல என்று அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவே தெரிவித்துள்ளார்.
உண்மையான ஜிஎஸ்டி என்பது எது? தற்போது அமலாகி இருப்பது எது? என்பது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளோம். பெட்ரோலியப் பொருள்கள், மின்சாரம், மனை வணிகம் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதை அப்போது வலியுறுத்துவோம்.
தொழில் துறையினரும், அரசு நிர்வாகத்தினரும் ஆயத்தமாவதற்கு முன்பாகவே ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டுள்ளது. குறைந்தது 2 மாதங்களுக்காவது புதிய வரிவிதிப்பு நடைமுறையை ஒத்திவைத்திருக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com