கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம் நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி

இஸ்ரேலில் உள்ள ஓல்கா கடற்கரையில் கடல் நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பத்தை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை
இஸ்ரேலில் உள்ள ஓக்லா கடற்கரையை ரசித்தபடி, அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவுடன் வியாழக்கிழமை உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
இஸ்ரேலில் உள்ள ஓக்லா கடற்கரையை ரசித்தபடி, அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவுடன் வியாழக்கிழமை உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.

இஸ்ரேலில் உள்ள ஓல்கா கடற்கரையில் கடல் நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பத்தை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பார்வையிட்டார்.
இதுதொடர்பாக, தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உப்பு கலந்த அல்லது மாசு கலந்த நீரில் இருந்து உயர் தரமான குடிநீரைத் தயாரிப்பதற்காக, நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் 'கால்- மொபைல்' என்ற சிறப்பு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள ஓல்கா கடற்கரையில், இந்தச் சிறப்பு வாகனத்தில் நன்னீர் தயாரிப்பது குறித்து பிரதமர் மோடிக்கும், நெதன்யாகுவுக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் நேரத்திலும், தண்ணீர் கிடைக்காத பகுதிகளில் ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கும், கிராமப்புறப் பகுதிகளில் குடிநீர் வழங்கவும் இந்தச் சிறப்பு வாகனம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வாகனத்தில் இருந்து நாளொன்றுக்கு 20,000 லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்க முடியும். இதேபோல், நாளொன்றுக்கு 80,000 லிட்டர் வண்டல் கலந்த அல்லது கலங்கிய ஆற்றுநீரைச் சுத்திகரிக்க முடியும்.
ஓல்கா கடற்கரையில் இந்தச் சிறப்பு வாகனத்தின் செயல்விளக்கத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடியும், நெதன்யாகுவும், அந்த வாகனத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சுவைத்துப் பார்த்தனர். மேலும், அந்த வாகனத்தையும் அவர்கள் ஓட்டிப் பார்த்தனர் என்று பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மோடி- நெதன்யாகு இடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நீர்ப்பாதுகாப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நீர்ப்பாதுகாப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, அதை மீண்டும் விவசாயத்துக்குப் பயன்படுத்துவது, நீர்ப் பயன்பாட்டில் சீர்திருத்தம், கங்கை உள்ளிட்ட நதிகளை நவீன தொழில்நுட்பம் மூலம் தூய்மைப்படுத்துவது ஆகியவற்றுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com