ஜல்லிக்கட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் மனு

ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு சார்பில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் மனு

ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு சார்பில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டியானது, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுவது வழக்கம். காளைகளை தழுவிக்கொண்டே சிறிது தூரம் செல்ல வேண்டும் என்ற விதிமுறையுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் போட்டிகளில் காளைகள் பெருமளவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டியை சட்டவிரோதம் எனக் கூறி கடந்த 2013-ஆம் ஆண்டு தடை செய்தது.

இதையடுத்து, தமிழகத்தின் கலாசார அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் உச்சகட்டமாக, சென்னை மெரினாவில் கடந்த ஜனவரி மாதம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

இதன் விளைவாக, ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தும் வகையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு, அதனை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து, நிகழாண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

மீண்டும் மனு: இந்தச் சூழலில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விலங்குகள் வதை தடைச் சட்டம் என்பது விலங்குகளின் நலனுக்காக இயற்றப்பட்ட சட்டமாகும். ஆனால், கலாசாரம், பண்பாடு என்ற பெயரில் இந்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது என்பது விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை நிலைக்கச் செய்துவிடும்.

அந்த வகையில்தான், ஜல்லிக்கட்டு போட்டியானது தற்போது கலாசார அடையாளமாக திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில், இதுதொடர்பான முந்தைய வழக்குகளில் கலாசாரம், பண்பாடு போன்ற எந்தவொரு சொல்லும் பயன்படுத்தப்படவில்லை. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com