லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்

பல்வேறு வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, நாடு கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக லண்டன்
லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்

பல்வேறு வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, நாடு கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக லண்டன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரால் கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி மல்லையா கைது செய்யப்பட்டார். எனினும், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே நிபந்தனை ஜாமீன் பெற்று அவர் வெளிவந்தார்.
மேலும், தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி வெஸ்ட்மின்ஸ்டர் நகர நீதிமன்றத்தில் மல்லையா வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து கடந்த மாதம் 13- ஆம் தேதி மல்லையாவுக்கு நீதிபதி விலக்கு அளித்தார்.
எனினும், இந்த வழக்கு தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜரானார். இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'எனது வழக்குரைஞரின் ஆலோசனையின் பேரில் செயல்படுகிறேன்' என்று பதிலளித்தார்.
ஒருவேளை இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்தால், அன்றைய தினத்திலிருந்து அடுத்த 2 மாதங்களுக்குள் அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவை பிரிட்டன் உள்துறை அமைச்சகம் பிறப்பிக்க வேண்டும்.
எனினும், இறுதித்தீர்ப்பு வருவதற்குள் இந்த வழக்கு பல்வேறு மேல்முறையீடுகளைச் சந்திப்பதற்கும் வாய்ப்புள்ளது.
இந்தியா- பிரிட்டன் இடையே கடந்த 1992- ஆம் ஆண்டு நாடு கடத்தல் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை ஒருவர் மட்டுமே இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கோத்ரா கலவரத்தில் தொடர்புடையவரும், லண்டனுக்கு தப்பிச் சென்றவருமான சமீர்பாய் வினுபாய் படேல் என்பவர்தான் அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர் ஆவார். அவர் விஷயத்தில் மல்லையா விவகாரம் போன்று சட்டச் சிக்கல்கள் எதுவும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com