ஜிஎஸ்டியால் பெங்களூரில் எகிறவிருக்கும் ஹாஸ்டல், பேயிங் கெஸ்ட் கட்டணங்கள்!

ஜிஎஸ்டியால் மேலும் 3 % ஏறவிருக்கும் ஹாஸ்டல் மற்றும் பேயிங் கெஸ்ட் வரி விகிதங்களைக் குறித்தான பீதி இப்போதே அங்கே ஹாஸ்டல் வாசிகள் மற்றும் பேயிங் கெஸ்ட் வாசிகளுக்கு வந்தாச்சு.
ஜிஎஸ்டியால் பெங்களூரில் எகிறவிருக்கும் ஹாஸ்டல், பேயிங் கெஸ்ட் கட்டணங்கள்!

பெங்களூரில் வசிப்பவர்களுக்கு சும்மாவே காஸ்ட் ஆஃப் லிவிங் அதிகம் என்றொரு மனக்குறை எப்போதும் உண்டு.  இப்போது புதிதாக நள்ளிரவில் வந்து இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த இந்த ஜிஎஸ்டி வேறு பெங்களூரு வாசிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. தென்னிந்தியாவில் பெங்களூரைப் பொறுத்தவரை கல்விக்காகவும், வேலைக்காகவும், சொந்தத் தொழிலுக்காகவும்... இன்னும் பல காரணங்களுக்காகவும் சதா இடம் பெயரக்கூடிய வேற்று மாநில மக்கள் நிறைந்த ஊர் அது. அங்கே மண்ணின் மைந்தர்களைக் காட்டிலும் வந்தேறிகளின் எண்ணிக்கை அதிகமாகவுமிருக்கலாம். அப்படிப் பட்ட ஒரு ஊரைப் பார்த்து, இப்போது அங்கே அடைகலமானவர்கள் பயந்து போய் இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமலில்லை. ஜிஎஸ்டியால் மேலும் 3 % ஏறவிருக்கும் ஹாஸ்டல் மற்றும் பேயிங் கெஸ்ட் வரி விகிதங்களைக் குறித்தான பீதி இப்போதே அங்கே ஹாஸ்டல் வாசிகள் மற்றும் பேயிங் கெஸ்ட் வாசிகளுக்கு வந்தாச்சு.

புதிய ஜிஎஸ்டியால் கல்லூரி, பல்கலைக் கழகங்கள், உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் முன்னர் விதிக்கப் பட்டிருந்த கட்டண விகிதமான 15% மேலும் உயர்த்தப்பட்டு இப்போது 18 % ஆக உள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த வரி விகிதத்தால் ஒவ்வொரு மாணவ, மாணவிக்குமே தங்களது கல்லூரி கட்டண விகிதத்தில் தலா 18,000 ரூபாய்கள் அதிகரிக்கவிருக்கிறதாம். இது கல்லூரிக்கான கட்டண விகிதம் மட்டுமே. அது தவிர தங்குமிடம், உணவு, லாண்டரி உள்ளிட்ட இதர செலவுகள் வேறு இருக்கின்றன. அவற்றையெல்லாம் கணக்கிட்டால் பெங்களூருக்குச் சென்று ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களது செலவு முன்னெப்போதையும் விட மிக அதிகமாக உச்சத்தில் ஏறி நிற்கவிருக்கிறது என்று ஒரு விதமான அச்சத்துடன் குழம்பிப் போய் நிற்கிறார்கள் அங்கிருக்கும் ஹாஸ்டல் மாணவிகள்.

ஹாஸ்டல் மட்டுமில்லை. ஹாஸ்டல் பிடிக்காத வெளியூர், வெளிமாநில மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததெனக் கருதப்படும் ‘பேயிங் கெஸ்ட்’  கட்டணங்களும் கூட இந்த புதிய ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் மிக அதிகமாக்கப் படலாம் என்றொரு வாதமும் அங்கே நிலவுகிறது. பேயிங் கெஸ்ட் முறையை மாநில அரசின் அங்கீகாரத்துடன் கூடிய முறைப்படியான தொழிலாகச் செய்பவர்கள் நிச்சயம் ஜிஎஸ்டிக்கு ஏற்ப தங்களது கட்டண விகிதங்களை அதிகரிக்கவே செய்வார்கள். இப்போதைய நிலையில் 3% உயர்த்தப் பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி முறையையொட்டி கட்டண விகிதங்களை உயர்த்துவதில் ஹாஸ்டல் மற்றும் பேயிங் கெஸ்ட் நிர்வாகிகளுக்கே சின்னதாக ஒரு குழப்பம் நிலவுவதால் தான் அவர்கள் கட்டண விகிதத்தை எப்படி உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு முறை கட்டண விகிதங்களை சரியாகக் கணக்கிட்டு யாராவது ஒருவர் உயர்த்தி விட்டால் பின்னர் அனைவருமே இவ்விசயத்தில் உயர்த்தப் பட்ட கட்டண விகிதங்களையே பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரை பெங்களூரில் பயிலும் மாணவர்கள் சராசரியாக 1.03 லட்சம் முதல் 2 லட்சம் வரை தற்போது கட்டணம் செலுத்தி வருகிறார்கள் எனில் அவர்களது கட்டணம் இந்த உயர்த்தப் பட்ட ஜிஎஸ்டியால் இனிமேல் 18,000 ரூபாய்கள் வரை கூடுதலாக வசூலிக்கப் படலாம். இந்நிலையில் பேயிங் கெஸ்டு வசதிகளைக் கொண்ட வீடுகளைத் தேடும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகளின் நிலை தான் கவலைக்குரியதாகி இருக்கிறது. ஹாஸ்டலில் தங்குவதென்றால் கட்டணம் அதிகமெனக் கருதி பேயிங் கெஸ்ட் இல்லங்களை நாடும் இத்தகைய மாணவிகளுக்கு குறைந்த பட்சம் 8000 ரூபாய்கள் இருந்தால் போதும், அவர்கள் விரும்பும் அனைத்து முக்கியமான வசதிகளுடனும் கூடிய ஒரு பேயிங் கெஸ்ட் வீடு கிடைத்து விடும். பேயிங் கெஸ்ட் வீடுகளில் கிடைக்கும் அதிக பட்ச சுதந்திர உணர்வோ அல்லது கட்டண விகிதத்தில் தளர்வோ எதுவும் கல்லூரி ஹாஸ்டல் கட்டணத்திற்குப் பொருந்தாது. அதனால் தான் பெரும்பாலான மாணவிகளும் ஹாஸ்டலைத் தவிர்த்து விட்டு பேயிங் கெஸ்ட் கலாச்சாரத்தை ஆதரிப்பவர்களாக மாறி விட்டனர். இப்போது இந்த புதிய ஜிஎஸ்டி அதையும் கெடுத்து விட்டது. அயல் மாநிலத்தில் தங்கிப் பயில வரும் மாணவிகள் கல்விக்கான கட்டணத்தை கட்டத்தான் வேண்டும்... ஆனாலும் அதிலொரு லகுத்தன்மை இல்லாமல் இப்படி அரசு ஒரேயடியாக கட்டணங்களை ஏற்றி இருக்கத் தேவையில்லை என மாணவர்களும், பேயிங் கெஸ்ட் ஓனர்களும் கருதுகிறார்கள்.

ஆக மொத்தம் பெங்களூர்வாசிகளைப் பொறுத்த வரை ஜிஎஸ்டி பயம் கொஞ்சல்  ஆட்டிப் படைக்கத் தான் செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com