உள்நோக்கத்துடன் செயல்படுகிறது இந்தியா: எல்லைப் பிரச்னையில் சீனா தாக்கு

டோகா லா எல்லையை முன்னிறுத்தி பிரச்னையை உருவாக்க உள்நோக்கத்துடன் இந்தியா செயல்படுவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

டோகா லா எல்லையை முன்னிறுத்தி பிரச்னையை உருவாக்க உள்நோக்கத்துடன் இந்தியா செயல்படுவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் அப்பகுதிக்குள் அந்நாட்டு அரசு சாலை அமைத்து வரும் நடவடிக்கைகளையும் சீனா நியாயப்படுத்தியுள்ளது.
இந்தியா, பூடான் மற்றும் சீனாவின் எல்லையாக டோகா லா விளங்குகிறது. இதனை பூடான் டோகோலாம் என்றும், சீனா டோங்லாங் என்றும் அழைக்கின்றன.
இந்தப் பகுதிக்குள் அத்துமீறி சாலை அமைத்து வரும் சீனப் படைகள், எல்லை தாண்டி வருவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் சிக்கிம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி அண்மையில் நுழைந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.
சிக்கிம் விவகாரத்தில் இரு தரப்பும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதற்கு சீனா, பதில் கருத்து தெரிவித்தும், மிரட்டல் விடுத்தும் வருகிறது. இதனால், டோகோ லா எல்லையில் அசாதாரண சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் வீரர்களை இந்தியா குவித்துள்ளது.
இந்தநிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் ஊடகவியலாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது இந்தியா மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
சிக்கிம் விவகாரத்தில் சீனா - பிரிட்டன் இடையே கடந்த 1890-ஆம் ஆண்டில் தெளிவான ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் சர்வதேச எல்லைகள் குறித்து வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது சிக்கிமின் எல்லை கிப்மோச்சி மலையின் கிழக்குப் பகுதியில் இருந்து தொடங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதிக்கு 2,000 மீட்டருக்கு அப்பால் உள்ள சர்வதேச எல்லைக்குள் அத்துமீறி இந்தியப் படைகள் நுழைந்துள்ளன.
டோகா லா எல்லை குறித்து இந்தியா - சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி நாங்கள் செயல்படவில்லை. சீனா சாலை அமைப்பதற்கும், எல்லை ஒப்பந்தத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எனவே, அந்த உடன்படிக்கையை மீறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது.
டோகா லா எல்லை விவகாரத்தை முன்னிறுத்தி உள்நோக்கத்துடன் சில பிரச்னைகளை உருவாக்க இந்தியா முயலுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com