சீன ஊடுருவல் விவகாரத்தில் மோடி அரசு அலட்சியம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சீனப் படையினர் சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவிய விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அலட்சியத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சீன ஊடுருவல் விவகாரத்தில் மோடி அரசு அலட்சியம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சீனப் படையினர் சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவிய விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அலட்சியத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையானது இந்தியாவின் நலன்களைக் காக்கும் வகையில் இல்லாமல், பிரதமரின் விடுமுறைக்கால ஓய்விடங்களுக்கான தேடல் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மோடியின் வெளியுறவுக் கொள்கை மிகைப்படுத்தப்பட்ட கருத்துகள், வெற்று பேச்சுத்திறன் ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கடுமையாகப் பேசுவதுதான், ராஜீய களத்தில் சீனாவுடன் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாகும் என்று அவர் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உலகின் அனைத்து வல்லரசு நாடுகளுடனும் இந்தியா சமநிலையான உறவுகளைப் பேணுவதை உறுதிசெய்தார். அப்போது சீனத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஊடுருவல் முயற்சியையும் நாங்கள் (காங்கிரஸ் ஆட்சி) திறம்படக் கையாண்டோம். உலக அரசியல் மற்றும் ராஜீயம் ஆகியவற்றின் தன்மையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புரிந்து வைத்திருந்தது.
மோடி, செயல்படுபவராக இருப்பதை விட எந்தப் பயனும் இல்லாமல் உரக்கப் பேசுபவர் என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் தனது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் மூலம் இந்தியாவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுப்பதோடு, நமக்கு கசப்பான பாடம் கற்பிப்போம் என்றும் பேசுகிறது.
இந்த விவகாரத்தில் மோடி அரசின் மென்மையான போக்குதான் இந்த நாட்டை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதே நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள்தான் 'சீனாவுக்கு கோபமான கண்களை மோடி காட்டுவார். அதைக் கண்டு சீனர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள்' என்று கூறினார்கள். நாம் பார்க்கும் சிவப்பு என்பது சீனாவின் ஊடுருவல் மட்டும்தான்.
சீனா இவ்வாறு ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், சீன ஊடுருவல் என்பது
மாறுபட்ட கருத்து என்று கூறுகிறார். அது வெறும் கருத்தா? அப்படியானால் சீன ஊடுருவலை யார் தடுத்து நிறுத்தியது என்பை நமது ராணுவ வீரர்களிடம் கூறுங்கள்.
கடந்த 45 தினங்களில் சீன ஊடுருவல்கள் 120 முறை நடைபெற்றுள்ளன. இந்தியப் பதுங்கு குழிகள் சேதப்படுத்தப்பட்டன. சீன போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிகளும் இந்தியப் பெருங்கடலில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா அண்மையில் இந்தியாவில் இருந்து மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்களைத் தடுத்து நிறுத்தி விட்டது. மேலும், சேதப்படுத்தப்பட்ட இந்திய பதுங்கு குழிகளின் படங்களையும் வெளியிட்டது. கடந்த மாதத்தில் சீன ராணுவத்தின் இரண்டு ஹெலிகாப்டர்கள் உத்தரகண்டில் இந்திய வான்வெளிப் பகுதிக்குள் அத்துமீறிப் பறந்தன என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன்?
சீன விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதிப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லைப் பகுதியில் சீனப் படையினரின் ஊடுருவல் குறித்து பிரதமர் மௌனமாக இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியும் ஏற்கெனவே கேள்வி எழுப்பியது. இந்தியா- பூடான்- சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் பதற்றத்தைத் தணிக்க என்ன உத்தியை வகுத்துள்ளோம் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com