சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய, தில்லி நியூ பிரெண்ட்ஸ் காலனியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவின் வீடு.
சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய, தில்லி நியூ பிரெண்ட்ஸ் காலனியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவின் வீடு.

லாலு, குடும்பத்தினரின் மீது சிபிஐ புதிய வழக்கு; 12 இடங்களில் அதிரடிச் சோதனை

ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது ரயில்வே உணவக நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் நிகழ்ந்ததாக சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.

ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது ரயில்வே உணவக நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் நிகழ்ந்ததாக சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இதில், லாலு பிரசாத், அவரது மகனும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு குடும்பத்தினர் மீது சிபிஐ பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தில்லி, பாட்னா, ராஞ்சி, புவனேசுவரம், குருகிராமம் ஆகிய நகரங்களில் லாலு, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள் உள்பட 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இது தொடர்பாக கூறியதாவது:
குற்றச்சதி, ஏமாற்றுதல், ஊழலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் லாலு அவரது குடும்பத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2004 முதல் 2014- ஆம் ஆண்டு வரை ரயில்வே ஹோட்டல் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. புரி, ராஞ்சியில் உள்ள ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான பிஎன்ஆர் ஹோட்டல்கள் முதலில் இந்திய ரயில்வேயின் உணவு பயண நிர்வாக அமைப்பான ஐஆர்சிடிசி- க்கு கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர், இந்த ஹோட்டல்களின் செயல்பாடு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பாட்னாவைச் சேர்ந்த சுஜீதா ஹோட்டல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
முக்கியமாக சுஜீதா ஹோட்டல் தவிர 15 நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்றுள்ளன. ஆனால், அவை தொடர்பான விவரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டன.
இதற்கு பிரதிபலனாக சுஜீதா ஹோட்டல் நிறுவனம் மேற்கு பாட்னாவில் உள்ள ரூ.32 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை லாலு குடும்பத்துக்கு சொந்தமான டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு ரூ.65 லட்சம் என்ற குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக கடந்த 5- ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இப்போது ஆதாரங்களைக் சேகரிக்கும் வகையில் சோதனை நடைபெற்றுள்ளது.
2004- ஆம் ஆண்டு நடந்த இந்த முறைகேட்டுக்கான குற்றச்சதியில் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி யாதவ், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக இருந்தவரும், லாலு கட்சி எம்.பி.யுமான பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சரளா குப்தா, சுஜீதா ஹோட்டல் இயக்குநர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார், டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனம், ஐஆர்சிடிசி மேலாண்மை இயக்குநர் பி.கே.கோயல் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
பழிவாங்கும் நடவடிக்கை - ஆர்ஜேடி குற்றச்சாட்டு: லாலு, அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்று லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஆர்ஜேடி பிகார் மாநிலத் தலைவர் ராமச்சந்திர பூர்வே கூறியதாவது:
பாட்னாவில் ஆகஸ்ட் 27- இல், தேசத்தைக் காப்பாற்றுவோம், பாஜகவை விரட்டுவோம் என்ற பெயரில் மிகப்பெரிய பொதுக் கூட்டத்தை லாலு நடத்த இருக்கிறார். இதனை தடுக்கும் நோக்கில் அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சிபிஐ- யை மத்திய அரசு ஏவி விட்டுள்ளது. ஜனநாயகத்தை காக்க யார் குரல் கொடுத்தாலும் அவர்களைப் பழிவாங்குவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது என்றார்.
என்சிபி எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் சிபிஐ- யை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக கேள்வி: லாலு மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், சிபிஐ சோதனை குறித்தும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கருத்துத் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏன்? என்று அந்த மாநில பாஜகவின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com