விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு பொது நல வழக்காடு மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது கடந்த ஏப்ரல் 13- ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரமாண பத்திரம்: இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வறட்சியின் பாதிப்பால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தமிழகத்தில் 82 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உடல் நலக் குறைவு, வயது முதிர்ச்சி, மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 82 விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. இதேபோல பல்வேறு மாநில அரசுகளின் சார்பிலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை: இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் பொருட்டு நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் கோபால் சங்கர் நாராயண், 'நாட்டில் நிலவும் வறட்சி தொடர்பாக விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய பதில் சில மாநிலங்கள் அளிக்கவில்லை' என்றார்.
தமிழக அரசு வாதம்: தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா ஆஜராகி, 'விவசாய உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. வறட்சி தொடர்பாக பல்வேறு நிவாரணத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான விவசாயிகள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யாமல், குத்தகை நிலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பயிர்க் கடன், பயிர் காப்பீடு ஆகியவை வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும், சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும் விவசாய விளைப்பொருள்களுக்கான விலையை இடைத்தரகர்கள் நிர்ணயிக்கின்றனர். இது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது' என்றார்.
தற்கொலை ஏன்?: இதைத் தொடர்ந்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு சார்பில் வழக்குரைஞர் ராஜாராமன் ஆஜராகி, 'வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமம் முழுவதற்கும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பொதுத் துறை வங்கிகளிடம் பலகோடி ரூபாய் கடன் பெற்ற விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் செல்ல முடிகிறது. ஆனால், வங்கிகளில் விவசாயிகளிடம் கடனை வசூலிக்க வங்கிகள் கெடுபிடி காட்டுகின்றன. இதனால், சுயமரியாதை இழக்கும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் டிராக்டர் முதலியவை ஜப்தி செய்யப்படுகின்றன' என்றார்.
நீதிபதிகள் கருத்து: வாதங்களைப் பதிவு செய்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், 'விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதற்கு மாறாக அவர்கள் தற்கொலை செய்துகொண்ட பிறகு நிவராணம் அளிப்பது அரசின் வேலை அல்ல. விவசாயக் கடன்களை வசூலிக்கும் வங்கிகள், விவசாயிகளுக்கு நிர்பந்தமும், நெருக்கடியும் தரமால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளிடம் வங்கிகள் நிர்பந்திப்பது குறித்து தெரிய வந்தால், அதில் தலையிட்டு விவசாயிகளுக்கு உதவ வேண்டும். மேலும், இதுபோல, கடன்பெற்ற வங்கிகளின் நிர்பந்தத்துக்கும், நெருக்கடிக்கும் விவசாயிகள் உள்ளாகும் போது அது குறித்து அரசுக்கு தெரிவிக்கும் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். விவசாய விளைப்பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவாக விற்காமல் இருக்கும் வண்ணம், இடைத்தரகர்களின் தலையீட்டுக்கு முடிவு கட்ட வேண்டும்' என்று தெரிவித்தனர். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com