சிக்கிம் எல்லைப் பிரச்னை: சீன நெருக்குதல்: தயார்நிலையில் இந்தியா

சிக்கிம் எல்லைப் பிரச்னையில், சீனாவின் நெருக்குதலுக்கு அடிபணிய மாட்டோம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சிக்கிம் எல்லைப் பிரச்னை: சீன நெருக்குதல்: தயார்நிலையில் இந்தியா

சிக்கிம் எல்லைப் பிரச்னையில், சீனாவின் நெருக்குதலுக்கு அடிபணிய மாட்டோம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் தனது நிலையை வலுப்படுத்தும் பணியிலும் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகளின் எல்லைப் பகுதிகளும் சந்திக்கும் இடமாக டோக்லாம் பகுதி திகழ்கிறது. அந்த பகுதியை நோக்கி, சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அந்தப் பணியை எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவை எச்சரிக்கும் வகையில் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் தனது வீரர்களைக் குவிக்க ஆரம்பித்தது. பதிலுக்கு இந்திய ராணுவமும் தனது வீரர்களைக் குவித்தது. அப்போது சீனாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில், இந்தியாவின் படைவலிமை கடந்த 1962}ஆம் ஆண்டில் இருந்ததைப் போல தற்போது இல்லை; இந்திய படைவலிமை அதிகரித்து விட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு வெளியிட்டார். பதிலுக்கு சீனாவும் தங்களது படைவலிமையும் அதிகரித்து விட்டதாக குறிப்பிட்டது.
இதனிடையே, ஜி20 நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, டோக்லாம் முற்றுகைக்கு தீர்வு ஏற்படும் என்றும், இருநாட்டு படை வீரர்களும் தங்களது நிலையில் இருந்து திரும்பப் பெறப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதற்கு மாறாக, டோக்லாம் பகுதியை தங்களுக்குச் சொந்தமான பகுதி என்றும், இந்தியா சட்டவிரோதமாக அங்கு ராணுவ வீரர்களை குவித்திருப்பதாகவும் சீனா குற்றம்சாட்டியது. அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியது. அதேநேரத்தில், சீன அரசு பத்திரிகையில், இந்தியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிக்கிம் தனிநாடாக சீனா உதவி செய்ய வேண்டும் என்றும் கட்டுரைகள் வெளியாகின. அடுத்தடுத்து நடைபெற்ற இந்நிகழ்வுகளால், சிக்கிம் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், டோக்லாம் பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்கள், தாங்கள் தொடர்ந்து அங்கு தங்குவதற்கு வசதியாக கூடாரங்களை அமைத்துள்ளனர். அந்த வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் சீராக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், டோக்லாம் பகுதியில் சீனாவின் நெருக்கடிக்கு இந்திய ராணுவம் அடிபணியாது என்பதும், தொடர்ந்து அப்பகுதியில் இந்திய ராணுவம் தங்கியிருக்க முடிவு செய்திருப்பதும் சூசகமாக தெரிய வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், "சிக்கிம் எல்லைப் பிரச்னைக்கு, இருநாடுகளும் ராஜீய ரீதியில் தீர்வைக் காணும் என்று நம்புகிறோம். ஏனெனில், இதற்கு முன்பு இதுபோன்ற பிரச்னைகள் பலமுறை ஏற்பட்டுள்ளன. அப்போது அந்தப் பிரச்னைகளுக்கு ராஜீய ரீதியிலேயே இருநாடுகளும் தீர்வு கண்டன' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சீனா பிடிவாதம்: இதனிடையே, சிக்கிம் எல்லைப் பிரச்னையை தீவிரமான பிரச்னையாக சீனாவும் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த பிரச்னையில், இந்தியாவுடன் எந்த சமரசத்துக்கும் தங்களது நாடு தயாராக இல்லை என்றும், எதிர்கால நடவடிக்கை குறித்து இந்தியாதான் அடுத்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டோக்லாம் பகுதி தொடர்பாக பூடானும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதை இந்தியா ஏற்கவில்லை. டோக்லாம் விவகாரம் என்பது 3 நாடுகளும் சம்பந்தப்பட்டது என்று இந்தியா தெரிவித்தது.
சீனாவுடன் பூடானுக்கு தூதரக ரீதியில் எந்த உறவும் கிடையாது. அண்டை நாடு, மிகவும் நெருங்கிய நட்பு நாடு என்ற முறையில், பூடானுக்கு ராஜீய மற்றும் ராணுவ ரீதியிலான ஆதரவை இந்தியாவே அளித்து வருகிறது.
இந்தியா}சீனா இடையேயான எல்லைப் பகுதி, 3,488 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இதில் சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 220 கிலோ மீட்டர் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com