திட்டமிடாமல் ஜிஎஸ்டி-யை அமல்படுத்த முயற்சிப்பது சாமானியர்களை பாதிக்கும்: காங்கிரஸ்

திட்டமிடப்படாத முறையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது சாமானிய மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

திட்டமிடப்படாத முறையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பது சாமானிய மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசானது கவர்ச்சிகரமான கோஷங்களிலும், வார்த்தை ஜாலங்களிலும் விருப்பம் கொண்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் சார்ந்த கொள்கைகளில் ஆட்சியாளர்களுக்கு புத்திசாலித்தனம் இல்லை. சுய சிந்தனை இல்லாத காரணத்தால் அவர்கள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் திட்டங்களை தொடர்ந்து பெயர் மாற்றி தங்களுடையது என்று விமளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு சிறந்த உதாரணமாகும்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த முனைந்தபோது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அதைக் கடுமையாக எதிர்த்துக் குரல் எழுப்பினார். எனினும், அவர் பிரதமரான பின் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டு ஜிஎஸ்டியை ஆதரிக்கத் தொடங்கி விட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இந்தத் திட்டத்தை காப்பி அடித்து, புகழ் பெற்று விட வேண்டும் என்ற தனது விருப்பத்தில் அவர் தனது இலக்கை எட்டத் தவறி விட்டார். ஏனெனில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது ஒரே விகிதத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது என்பதையும் அதைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் பாஜக அரசு அந்த வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ளது என்பதையும் மோடி மறந்து விட்டார்.
தற்போது 0.25, 3, 5, 12, 18, 40 ஆகிய விகிதங்களில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்படுகிறது. இந்த அமலாக்கத்தில் மாநில அரசுகளுக்கு உள்ள சிறப்புரிமை காரணமாக இந்த விகிதம் மேலும் அதிகமாகக் கூட இருக்கலாம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தால் அதன் உச்சவரம்பு 18 சதவீதம் என்று நிர்ணயம் செய்திருக்கும். தற்போதைய மோடி அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூட இந்த வரிவிதிப்பிற்கு 15.5 சதவீதத்தை உச்ச வரம்பாக நிர்ணயிப்பதற்குப் பரிந்துரை செய்திருந்தார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பான குழப்பாமானது வர்த்தகர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி அரசுத் துறைகளிடையேயும் காணப்படுகறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகராட்சியில் ரூ.200 கோடி மதிப்பிலான டெண்டர்கள் முடங்கிக் கிடக்கின்றன. இதற்கு, டெண்டர் கட்டணங்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பதை ஜெய்ப்பூர் நகராட்சி அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் தெரியாததுதான் காரணம்.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராடிய வர்த்தகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். நாட்டின் தலைநகரான தில்லியில் கூட இந்த வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றன.
ஜிஎஸ்டி வரிவிதிப்பை சுமுகமாக அமல்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ள கணினி மென்பொருளானது இன்னும் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை. இவை அனைத்தும் இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இது குறித்து கவலைப்படாத, ஜிஎஸ்டி குறித்து விளக்கக் கூட இயலாத அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளது என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com