6000 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை உரிமம் விரைவில் ரத்து

சுமார் 6,000 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் ரத்து செய்யும் என்று தெரிகிறது.

சுமார் 6,000 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் ரத்து செய்யும் என்று தெரிகிறது.
வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடைகளுக்கு உரிய கணக்குகளை தாக்கல் செய்யாததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள் என்று பதிவு செய்து செயல்படும் பல அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெறுகின்றன. ஆனால், அவை எதற்காக செலவிடப்படுகின்றன என்று உரிய கணக்குகளை அந்த அமைப்புகள் தாக்கல் செய்வது இல்லை.
பெரும்பாலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கும், மதமாற்ற நடவடிக்கைகளுக்கும் அத்தொகை செலவிடப்படுவதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து, இது போன்ற தொண்டு நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு தொடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 18,523 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அந்த தொண்டு நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கான வரவு- செலவுக் கணக்குகளை ஜூன் 14- ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென்று கூறப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்கள் வரவு- செலவுக்கு கணக்கை தாக்கல் செய்தன.
எனினும், 5,922 தொண்டு நிறுவனங்கள் மட்டும் முழுமையாக 5 ஆண்டுகளுக்கான கணக்கை அளிக்கவில்லை. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று கேள்வி எழுப்பி அந்த நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயல்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு ஜூலை 23- ஆம் தேதிக்குள் 5,922 தொண்டு நிறுவனங்களும் உரிய பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக அந்த தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.
முன்னதாக, கடந்த 2016- ஆண்டு இறுதியில் 20,000- க்கும் மேற்பட்ட தொண்டு அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை உரிமம் பெற்றிருந்தன. அவற்றை ஆய்வு செய்த மத்திய அரசு அவற்றில் சுமார் 11,000 தொண்டு அமைப்புகள் உரிமத்தை புதுப்பிக்க உரிய முறைப்படி மீண்டும் விண்ணபிக்க வேண்டுமென்று இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரவிட்டது. அதில் 3,500 தொண்டு அமைப்புகள் மட்டுமே தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொண்டன. 7,000- க்கும் மேற்பட்ட அமைப்புகள் உரிமத்தை புதுப்பிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com