அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: பலியானவர் பெயர் வெளியீடு

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: பலியானவர் பெயர் வெளியீடு

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 6 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 5 போலீஸார் உள்பட 32 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பக்தர்கள், அமர்நாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரை சென்றுவிட்டு, சோனாமார்க் எனுமிடத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் ஜம்முவுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அனந்த்நாக்கில் கானாபால் எனுமிடத்தில் அந்தப் பேருந்து வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென அதன்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில், 6 பெண்கள் உள்பட 7 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 போலீஸார் உள்பட 32 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தனர்.

முன்னதாக, காவல்துறையினர் வந்த கவச வாகனத்தின்மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு காவல்துறையினரும் துப்பாக்கியால் திருப்பிச் சுடவே, பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டனர். அதன்பிறகே, யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பில் ஏதேனும் ஒரு அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 7 பேரின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

1. Hasuben Ratila Patal, R/O: Vadoli School Faliya, Valsad Gujarat

2. Surakha Ben, R/O: Udwada, Valsad Gujarat

3. Patal Lakshimiben, R/O: Valsad Gujarat

4. Usha Mohanla Sonkar, W/O: Mohan Moti

5. Thakor Nirmalaben

6. Ratan Zina Bhai Patal

7. Patal Lakshmi Ben

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com