சிபிஐ வழக்குப்பதிவு விவகாரம்: பிகார் துணை முதல்வர் பதவியை லாலு மகன் ராஜிநாமா செய்ய மாட்டார்: ஆர்ஜேடி

பிகார் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி தெரிவித்துள்ளது.

பிகார் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி தெரிவித்துள்ளது.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டாக இணைந்து ஆட்சியமைத்துள்ளன. ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், முதல்வராக உள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் துணை முதல்வராகவும், லாலுவின் மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவ் அமைச்சராகவும் உள்ளனர்.
இந்நிலையில், ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் முன்பு இருந்தபோது, ரயில்வே ஹோட்டல்களின் நிர்வாக பொறுப்பை தனியார் நிறுவனத்துக்கு அளித்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், லாலு குடும்பத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் சிபிஐ கடந்த 7ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ் குமாரோ, அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ கருத்து தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், பிகார் துணை முதல்வர் பதவியிலிருந்து தேஜஸ்வி பிரசாத் யாதவ் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் முந்த்ரிகா பிரசாத் யாதவ், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், துணை முதல்வர் பதவியிலிருந்து தேஜஸ்வி பிரசாத் யாதவ் ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை அக்கட்சியின் மற்றொரு சட்டப் பேரவை உறுப்பினரான ராமானுஜ் பிரசாத்தும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், லாலு பிரசாத், ராப்ரி தேவி, தேஜஸ்வி பிரசாத் யாதவ், அவரது சகோதரரும் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சட்டப் பேரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி உறுப்பினர்கள் தலைவராக தேஜஸ்வி பிரசாத் யாதவின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில நிதி அமைச்சருமான அப்துல் பாப்ரி சித்திகி இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும், இக்கூட்டத்தில் தேஜஸ்வி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
லாலுவுடன் நிதீஷ் தொலைபேசியில் பேச்சு
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன், பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினார். இந்தத் தகவலை ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் மூத்தத் தலைவர் ஜக்தானந்த் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். அதேசமயம், தொலைபேசியில் நிதீஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் என்ன பேசிக் கொண்டனர் என்பது தொடர்பான விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com