கேரள நடிகை துன்புறுத்தப்பட்ட விவகாரம் மலையாள நடிகர் திலீப் கைது

பிரபல கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், மலையாள நடிகர் திலீப் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கேரள நடிகை துன்புறுத்தப்பட்ட விவகாரம் மலையாள நடிகர் திலீப் கைது

பிரபல கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில், மலையாள நடிகர் திலீப் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், 'நடிகையை கடத்த சதி செய்தது, தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்' என்றனர். இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விரோதமே, இந்தச் சம்பவத்துக்கு காரணம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக திலீப்பின் நண்பரும், இயக்குநருமான நாதீர் ஷா உள்ளிட்ட 3 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள அந்த கேரள நடிகை, கொச்சி அருகே நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு கடந்த பிப்ரவரி மாதம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த நபர்கள், அவரை கடத்திச் சென்றனர். பல மணி நேரமாக காரில் வைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்த நபர்கள், பின்னர் நடிகையை இறக்கிவிட்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த காரின் ஓட்டுநர் மார்டின் அந்தோணியைக் கைது செய்தனர். பிறகு, அவர் அளித்த தகவலின்பேரில் பல்சர் சுனி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தச் சம்பவத்துக்காக தனக்கு ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்ட தகவலை வெளியிட்டார். மேலும், நடிகர் திலீப்புக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, திலீப், அவரது மனைவி காவ்யா ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனால், திலீப் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கடந்த சில நாள்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடிகர் திலீப்பிடம் காவல்துறையினர் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை பல மணி நேரம் நீடித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் திலீப்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
காங்கிரஸ் வலியுறுத்தல்: இதனிடையே, இந்த விவகாரத்தில் சதிச் செயல் காரணமல்ல என்று தெரிவித்ததற்காக முதல்வர் பினராயி விஜயன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தினார். முதல்வரின் இந்த அறிவிப்பு, விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com